மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 1 டிச 2020

குறை காண்பதிலும் பலன் உண்டு!

குறை காண்பதிலும் பலன் உண்டு!

ஒரு கப் காபி!

எந்தவொரு விஷயத்திலும் குறைகள் மட்டுமே கண்டுபிடிப்பவரைக் கண்டால் எவருக்கும் ஆகாது. தெரிந்தோ தெரியாமலோ, நம்மில் பலரிடம் அந்த குணம் இருக்கத்தான் செய்கிறது. தனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்கள், அதனைத் திருத்த வேண்டுமென்று நினைப்பவர்கள், தனது மேதாவித்தனத்தைக் காட்ட விரும்புபவர்கள், வேண்டுமென்றே குறை காண்பவர்கள், மற்றவர்களின் தவறுகளைப் பூதாகரப்படுத்தி அதில் தன் குறைகளை மறைத்துக்கொள்பவர்கள் என்று இத்தகைய மனிதர்கள் பலவாறு இருப்பார்கள். ஆனால், குறைகள் மட்டுமே கண்டுபிடித்துப் புலப்படுத்துவதால் மட்டும் கற்றுக்கொள்ளல் எனும் செயல் நிகழாது.

குறைகள் ஏன் உண்டாகின்றன என்பதை யோசித்தால் அது நிகழாமல் தடுக்க முடியும். பத்திரிகைகளில் பிழை திருத்தும் வேலையைச் சிரத்தையுடன் செய்பவர் பின்னாளில் எழுத்தாளராகவோ, பத்திரிகையாளராகவோ மாற வாய்ப்புண்டு.

கதை, கவிதை, கட்டுரை என்று எதுவும் எழுத வரவில்லை என்று வருத்தப்படுபவர்கள், வேறு ஒருவரது படைப்பில் குறைகளைக் கண்டுபிடித்து அவற்றின் காரணங்களை ஆராயத் தொடங்கினால். சில நாட்களிலேயே நல்ல படைப்பூக்கத்தைப் பெற முடியும். அதன் பின், அவர்களாலும் எழுத முடியும்..

எந்தத் துறையானாலும் நமது முத்திரையைப் பதிக்கும் முன்னர் அதிலிருக்கும் குறைகளை, தவறுகளைக் கண்டறியத் தொடங்க வேண்டும். சினிமாவை எடிட்டிங் டேபிளில் கற்றுக்கொள்ளலாம் என்று சில ஜாம்பவான்கள் சொல்வதற்கும் இதுவே காரணமாக இருந்திருக்கும்.

அதே நேரத்தில், குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் புழுதி வாரி இறைக்கக் கூடாது. அப்படிச் செய்வதனால் தற்காலிகக் கவன ஈர்ப்பை உருவாக்கலாமே அன்றி, கற்றுக்கொள்ளுதல் எனும் செயல் நிகழாது.

ஏற்கனவே இருக்கும் படைப்புகளில் குறைகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கும்போது நிறைகளும் கண்ணில் படத் தொடங்கும். சம்பந்தப்பட்ட படைப்பாளியின் செயல்திறன் அபாரமாக இருந்ததை உணர முடியும். குறைகளையும் நிறைகளையும் நிறுக்கும் தராசாக நீங்களே மாறும்போது, புதிய தரிசனங்கள் கிட்டும்!

- பா.உதய்

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon