மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

பால் தட்டுப்பாடு: முகவர்கள் எச்சரிக்கை!

பால் தட்டுப்பாடு: முகவர்கள் எச்சரிக்கை!

மே 5ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்படும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தின் நிறுவனர் சு.ஆர்.பொன்னுசாமி இன்று (மே 3) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் மே 5 (ஞாயிறு) அன்று சென்னையில் 36ஆவது வணிகர் தின மாநாடு நடைபெறவுள்ளது. அதனால், தமிழகம் முழுவதிலும் உள்ள லட்சக் கணக்கான வணிகர்கள் அனைவரும் தங்கள் கடைகளுக்கு முழுநேர விடுமுறை அளித்து வணிகர் தின மாநாட்டில் பங்கேற்பார்கள்.

சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் அனைவரும் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களின் பால் விற்பனை நிலையங்களை அடைத்து 36ஆவது வணிகர் தினத்திற்கு தங்களது தார்மீக ஆதரவை வழங்குவார்கள். அன்றைய தினம் தமிழகத்திலுள்ள லட்சக்கணக்கான வணிகர்கள் தங்களது கடைகளுக்கு விடுமுறை அளிக்கவிருப்பதால் தமிழகம் முழுவதும் பால் முகவர்கள் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களிடமிருந்து 100% பாலை கொள்முதல் செய்து, அவற்றை இருப்பில் வைத்து விநியோகிப்பது இயலாத காரியமாகும்.

ஆகவே தமிழகம் முழுவதும் உள்ள பால் முகவர்கள் அனைவரும் தினசரி கொள்முதல் செய்கின்ற 100% பாலில் (சுமார் 1.5 கோடி லிட்டர்), மே 5ஆம் தேதியன்று ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களிடமிருந்து சுமார் 50% முதல் 60% பாலை கொள்முதல் செய்ய மாட்டார்கள். அதன் காரணமாக மே 5ஆம் தேதியன்று மட்டும் தமிழகம் முழுவதும் பரவலாக பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை இருப்பதால், பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பாலை முந்தைய நாளே (மே 4) முன்னெச்சரிக்கையாக வாங்கி வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon