மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

திமுக சகுனி - அமமுக துரியோதனன்: ஜெயகுமார்

திமுக சகுனி - அமமுக துரியோதனன்: ஜெயகுமார்

திமுகவும், அமமுகவும் சகுனியையும், துரியோதனனையும் போன்றவர்கள், ஆனால் நாங்கள் பாண்டவர்களை போன்றவர்கள் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

அமமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு ஏப்ரல் 30ஆம் தேதி சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொறடா ராஜேந்திரன் பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தால்தான் மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வேளையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வந்துள்ளது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பதால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் இன்று (மே 3) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார், “கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக விமர்சனங்கள் எழும்போது நடவடிக்கை என்பது தவிர்க்க முடியாதது. கொறடா கொடுத்த புகாரின் அடிப்படையில் சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்துள்ளார். அவர்கள் நாங்கள் நீதிமன்றத்துக்கு போக மாட்டோம் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது போயிருக்கிறார்கள். அதிமுக இல்லை அமமுகதான் என்று இப்போது சொல்கிறார்கள். இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் அமமுகவுக்கும், திமுகவுக்கும் உள்ளது. ஆனால் அதிமுகவில் கருத்து வேறுபாடுகளே கிடையாது. அதிமுக, ஜெயலலிதாவுடைய அரசு, கோடானு கோடி தொண்டர்கள் என்பதுதான் அதிமுகவின் ஒரே நிலை” என்றார்.

ஆட்சியை தக்கவைக்கிற சூழ்ச்சியாகத்தான் இந்த 3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டுகின்றன என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு, “திமுகவைப் பொறுத்தவரையில் சகுனி சூழ்ச்சியெல்லாம் அவர்கள் செய்வது வழக்கம். எங்களுக்கு அந்த சூழ்ச்சி தெரியாது. நாங்கள் பாண்டவர்கள். அதேபோல அமமுக துரியோதனர்கள். விரோதமும், துரோகமும் ஒன்று சேர்ந்திருக்கிறது. அவர்களால் இந்த பாண்டவர்களை ஒன்றும் செய்ய இயலாது. பாண்டவர்கள்தான் எப்போதும் வெற்றி பெறுவார்கள்” என்றார்.

வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்று கேட்டதற்கு, “23ஆம் தேதிக்குப் பிறகு அமமுகவும், திமுகவும் நினைத்தது கண்டிப்பாக நடக்காது. ஜெயலலிதாவுடைய அரசு 2021 வரை தொடரும். மக்களவைத் தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் கட்டாயம் வெற்றி பெறுவோம். தமிழக மக்களின் எண்ணங்களை முடிந்தவரைப் பூர்த்தி செய்வோம்” என்றார்.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon