மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

புதுக்கோட்டை: வங்கி ஊழியர் உடல் மீட்பு!

புதுக்கோட்டை: வங்கி ஊழியர் உடல் மீட்பு!

புதுக்கோட்டையிலுள்ள வங்கியில் நகைகள் காணாமல் போன விவகாரத்தில் தேடப்பட்டு வந்த வங்கி ஊழியர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், புதுக்கோட்டை ராஜவீதியிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பெயர் ராணி. இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மாரிமுத்துவுக்குச் சொந்தமாக கார் ஒன்று உள்ளது.

கடந்த ஞாயிறு (ஏப்ரல் 28) அன்று காரில் வெளியே காரில் கிளம்பிய மாரிமுத்து, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், மாரிமுத்துவைக் காணவில்லை என்று கூறி, அவரது மனைவி ராணி கணேஷ்நகர் போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன்னர் வல்லாத்திரக்கோட்டை பகுதியிலுள்ள தைலமரக் காட்டில் எரிந்த நிலையில் ஒரு கார் நின்றது கண்டறியப்பட்டது. விசாரணையில், அது மாரிமுத்துவுக்குச் சொந்தமான கார் என்று கண்டறியப்பட்டது.

காரினுள் சில கவரின் வளையல்கள், ஒரு ஹார்ட் டிஸ்க் இருந்ததாகத் தகவல் வெளியானது. இது குறித்து வல்லாத்திராக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (மே 3) காலையில் கோடியக்கரை கடற்கரையில் ஒரு ஆண் பிணம் கரையொதுங்கியது. அது மாரிமுத்துவின் சடலமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இது பற்றி தகவல் தெரிவித்தனர் மணல்மேல்குடி போலீசார். ராணி, மாரிமுத்துவின் தாய் ஆகியோர் வந்து பார்வையிட்டு, அது மாரிமுத்துவின் சடலம்தான் என்பதனை உறுதி செய்தனர்.

முன்னதாக, மாரிமுத்து காணாமல்போனதையடுத்து அவர் பணியாற்றிய வங்கியில் நகைகள் பெருமளவில் காணவில்லை என்று புகார் எழுந்தது. இதனால், வாடிக்கையாளர்கள் பெருமளவில் நேற்று (மே 2) அவ்வங்கிக்குச் சென்று, தங்களது நகைகள் பத்திரமாக இருப்பதனை அறிய விரும்புவதாகத் தெரிவித்தனர். கணக்கு எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும், அது முடிந்த பின்னர் தகவல் தெரிவிப்பதாகவும் அவர்களிடம் அதிகாரிகள் பதிலளித்தனர்.

தற்போது நகைகள் காணாமல் போன விவகாரத்தில் மாரிமுத்துவுக்குத் தொடர்புள்ளதா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon