மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

வன்முறையை ஊக்குவிக்கும் இந்துமதம்: யெச்சூரி

வன்முறையை ஊக்குவிக்கும் இந்துமதம்: யெச்சூரி

இந்து மதம் வன்முறையை ஊக்குவிக்கிறது என சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக சார்பில் மத்தியப் பிரதேசத்தின் போபால் தொகுதியில் போட்டியிடுபவர் சாத்வி பிரக்யா தாகூர். இவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது இந்துக்கள் வன்முறைகள் மீது நம்பிக்கையற்றவர்கள் என்று கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “பல அரசர்களும் தலைவர்களும் இந்த நாட்டில் போர்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். மகாபாரதத்திலும், ராமாயணத்திலும் கூட வன்முறைகள் நிரம்பியுள்ளன. பிரச்சாரங்களில் நீங்கள் இந்த இதிகாசங்களைக் கூறுகிறீர்கள். ஆனால் இந்துக்கள் வன்முறையாளர்கள் அல்ல என்றும் கூறுகிறீர்கள்? என்ன தர்க்கத்துடன் இதைக் கூறுகிறீர்கள்? இந்து மதம் வன்முறையை ஊக்குவிக்கிறது. ஆனால் இந்துக்கள் வன்முறையை விரும்பவில்லையா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

போபாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “சாத்வி பிரக்யா இந்துத்துவ அஜெண்டாவை பரப்பி வருகிறார். மவுரிய சாம்ராஜ்யத்தினர்தான் புத்த கொள்கைகளின்படி வன்முறையற்ற கலாச்சாரத்தைப் பின்பற்றினார்கள். மற்ற சமூகங்களை எவரேனும் தாக்கினால், தனது சொந்த சமூகத்தையும் அது சேதப்படுத்தும் என்று அசோகர் கூறினார். எங்கள் கலாச்சாரம் இதுதான். இதை எந்த பாஜகவினரும் பிரச்சாரம் செய்யவில்லை” என்றார்.

மேலும், “இந்துத்துவாக்கும் இந்துயிசத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்துத்துவா என்பது ஒரு அரசியல் திட்டம் என்று வினாயக் தாமோதர் சாவர்க்கர் கூறுகிறார். இந்துக்களை ராணுவமயமாக்க வேண்டும்; ராணுவத்தை இந்துமயமாக்க வேண்டும் என்பதும் அவருடைய முழக்கமாக இருந்தது. இந்த வழியில்தான் இந்துக்கள் ஆர்எஸ்எஸ்ஸில் இணைக்கப்பட்டனர். பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே இந்து தத்துவத்தால் ஈர்க்கப்பட்டவர். இவர் முசோலினியின் மீது ஈடுபாடு கொண்டு இத்தாலிக்கு சென்றார். அங்கிருந்து திரும்பி வந்து ராணுவ அகாடமியை தொடங்கினார். பின்னாளில் இது இந்து தேசியவாதிகளுக்கு ஊக்கமளித்தது. எனவே இந்துக்கள் வன்முறையை ஊக்குவிக்க மாட்டார்கள் என்று தவறாகக் கூற வேண்டாம். வரலாற்று ரீதியாக அதை நிரூபிக்க இயலாது” என்றார்.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon