மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

மருத்துவ மாணவர்களின் மனு தள்ளுபடி!

மருத்துவ மாணவர்களின் மனு தள்ளுபடி!

புதுச்சேரி மருத்துவக் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள், மீண்டும் தங்களைப் படிப்பில் சேர அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிம்ஸ் எனப்படும் புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கையை 100ல் இருந்து 150 ஆக உயர்த்த அனுமதிக்கும்படி இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே கல்லூரியில் கூடுதலாக 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால் இந்த மாணவர்களின் சேர்க்கை முறையாக இல்லை என்ற புகாரில் அந்த 50 இடங்களையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்நிலையில், அந்த இடங்களில் 33 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப 330 மாணவர்களை கலந்தாய்வுக்கு அழைத்து சென்டாக் எனப்படும் மாணவர் சேர்க்கை குழு பத்திரிகை செய்தி வெளியிட்டது.

ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் வெளியேற்றப்பட்ட தங்களை அழைக்காமல், 330 பேரை அழைத்த சென்டாக் அமைப்பின் பத்திரிகை செய்தியை ரத்து செய்யக் கோரியும், தங்களை முதலாம் ஆண்டில் தொடர்ந்து அனுமதிக்கக் கல்லூரிக்கு உத்தரவிடக் கோரியும் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை இன்று (மே 3) விசாரித்த நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு, சென்டாக் அமைப்பு தயாரித்த 330 பேர் கொண்ட பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததை ஏற்றுக்கொண்டு உச்ச நீதிமன்றம் அந்த பட்டியலுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அப்போது யாரும் அந்த பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவால் மருத்துவ கல்வி வாய்ப்பை இழந்தவர்களுக்கு இந்தாண்டு மாணவர் சேர்க்கையில் இடம் வழங்க உத்தரவிடவோ, சென்டாக் அமைப்பின் பத்திரிகை செய்தியை ரத்து செய்யவோ முடியாது என கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon