மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

ஸ்பெயினில் விருது பெற்ற தனுஷ் படம்!

ஸ்பெயினில் விருது பெற்ற தனுஷ் படம்!

ஆங்கிலத்தில் உருவான ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் எ ஃபகிர்’ திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் ஆங்கிலத்தில் தனுஷ் அறிமுகமானார். இந்தப் படத்தை இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருந்தார். இந்தப் படம் 2018ஆம் ஆண்டு மே 18ஆம் தேதியன்று பிரான்ஸ் நாட்டில் வெளியானது. இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்தில், தெருக்களில் மந்திரக் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைஞர் வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார். தனக்கு பிரத்யேகமான மந்திர சக்திகள் இருப்பதாக மக்களை நம்பவைத்து அவர்களை வஞ்சிக்க முயற்சி செய்கிறார் தனுஷ். ரொமைன் பூர்டோலாஸ் எழுதிய நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டது. இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, லிப்யா ஆகிய நாடுகளில் இந்தப் படம் படம்பிடிக்கப்பட்டது.

ஸ்பெயின் நாட்டில் பார்செலோனாவில் சண்ட் ஜோர்டி சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் எ ஃபகிர் படமும் திரையிடப்பட்டது. சிறந்த நகைச்சுவை திரைப்படத்துக்கான விருதை இந்தப் படம் தட்டிச்சென்றுள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தவர் தனுஷ். தற்போது ஆங்கிலத்தில் முதல் படத்திலேயே விருதினைக் கைப்பற்றிவிட்டார். தற்போது, வெற்றி மாறன் இயக்கி வரும் அசுரன் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் பிஸியாக உள்ளார்.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon