மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 நவ 2019

கொலைகாரனுக்கு தேதி குறித்த படக்குழு!

கொலைகாரனுக்கு தேதி குறித்த படக்குழு!

கொலைகாரன் படத்தின் புரொமோக்களுக்கு ரசிகர்களிடமும், கோலிவுட் வர்த்தக வட்டாரங்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி ஒரு சீரியல் கொலைகாரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் நடித்துள்ளார். இந்தப் படம் மே மாதம் வெளியாகும் என்று யூகிக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் 5ஆம் தேதியன்று (புதன்கிழமை) கொலைகாரன் படம் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ரம்ஜான் பண்டிகை விடுமுறை நாட்களை குறிவைத்து ஜூன் 5ஆம் தேதியன்று இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அயோக்யா, மிஸ்டர் லோக்கல், என்ஜிகே உள்ளிட்ட பெரிய படங்கள் இந்தத் தேதியில் மோதவில்லை என்ற காரணத்தால் வர்த்தக ரீதியாகவும் உகந்த தினமாக அமைந்துள்ளது. எனினும், விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்தின் ரிலீஸ் நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கொலைகாரன் படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு லீலை படத்தை இயக்கியவர். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அஷிமா நர்வால் நடித்துள்ளார். ஆண்ட்ரூ லூயிஸும், விஜய் ஆண்டனியும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் விஜய் ஆண்டனி நடித்த அண்ணாதுரை, காளி, திமிறு புடிச்சவன் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஆகையால் கொலைகாரன் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon