மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தடை கோரி இரண்டு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினகரனின் அமமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் மீது கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார் கொறடா ராஜேந்திரன். இதனை ஏற்று மூவருக்கும் விளக்கம் கேட்டு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது திமுக.

22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தல் முடிவுகள் வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தில்தான் மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுவதாக திமுக, அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. ஆனால் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது என்று முதல்வர் கேள்வி எழுப்பியிருந்தார். சபாநாயகர் அனுப்பிய 185 பக்க நோட்டீஸ் மூவருக்கும் நேற்று சென்று சேர்ந்தது. அடுத்த 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மூவரில் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய இருவரும் தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று (மே 3) வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில் “எங்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பதாக ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்டோம். எனவே சபாநாயகர் எங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு இதில் மனுதாரராக சேர்க்கப்படவில்லை. அவரை அதிமுக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகவும், அவர் மூலமாக மற்ற இருவரையும் இழுக்க பேசிவருவதாகவும் கடந்த இரண்டு நாட்களாக டிஜிட்டல் திண்ணை பகுதியில் பதிவு செய்துவருகிறோம். இந்த நிலையில் பிரபு வழக்கு தொடராதது அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon