மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

பர்தாவுக்கு தடை: கேரள அமைச்சர் ஆதரவு!

பர்தாவுக்கு தடை: கேரள அமைச்சர் ஆதரவு!

கல்வி நிறுவன வளாகங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியத் தடை விதிக்கப்படுவதாக கேரளாவிலுள்ள முஸ்லிம் கல்விச் சங்கம் அறிவிப்பு வெளியிட்டதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் அம்மாநில அமைச்சர் கே.டி.ஜலீல். அது மட்டுமல்லாமல், உடை அணிவதில் கட்டுப்பாடு கொண்டுவரும் எண்ணம் ஏதும் கேரள அரசுக்கு இல்லையென்றும் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதியன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள், கடை வீதிகளில் குண்டுவெடிப்புகள் பயங்கரவாதிகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதற்கடுத்த நாட்களிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததால் இலங்கையில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமானது. அதன்பின்னர், அங்கு பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியத் தடை விதித்து உத்தரவிட்டார் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிரிசேனா.

கடந்த மே 1ஆம் தேதியன்று சிவசேனாவின் கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில், இந்தியாவிலும் பர்தா அணியத் தடை விதிக்க வேண்டுமென்ற கருத்து இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோடில் இயங்கிவரும் முஸ்லிம் கல்விச்சங்கமானது, தங்களின் கீழ் உள்ள கல்வி நிறுவன வளாகங்களில் பர்தா மற்றும் முகத்தை மூடும் வகையில் திரைகளை அணிவதற்குத் தடை விதித்தது. அடுத்த கல்வியாண்டில் இருந்து இது அமல்படுத்தப்படும் என்று ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. 35 கல்லூரிகள், 72 பள்ளிகளை நடத்தி வரும் கேரள கல்விச் சங்கமானது, பர்தா தடை குறித்து கடந்த ஏப்ரல் 17ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த முடிவினை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளார் கேரள மாநில உயர்கல்வி மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கே.டி.ஜலீல். “ஹஜ் பயணம் மேற்கொள்ளும்போது முஸ்லிம் பெண்கள் தங்கல் முகத்தை மூடுவதில்லை. பெண்கள் முகத்தை மறைக்க வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது. அதனால், முகத்தை மறைக்க வேண்டுமென்று சொல்வது தவறானது” என்று அவர் தெரிவித்தார். இது பற்றி இஸ்லாம் அமைப்புகள் ஆய்வு செய்ய வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உடை கட்டுப்பாடு விஷயத்தில் எந்தவொரு விஷயத்தையும் திணிக்க கேரள மார்க்சிஸ்ட் அரசு விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon