மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

மசூத் அசாரின் சொத்துகள் முடக்கம்!

மசூத் அசாரின் சொத்துகள் முடக்கம்!

மசூத் அசாரின் சொத்துகள் முடக்கப்படுவதாகவும், அவர் வெளிநாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

ஐநா பாதுகாப்பு குழுவில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்திருந்தன. இதற்கு, ஐநா பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பினராக இருக்கும் சீனா முட்டுக்கட்டை போட்டு வந்தது. பின்னர், தொடர் அழுத்தங்களுக்கும், பேச்சுவார்த்தைகளுக்கும் பின் சீனா ஒப்புதலளித்தது. இதன்படி மே 1ஆம் தேதியன்று ஐநா பாதுகாப்பு குழுவில் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்படுவோரின் சொத்துகள் முடக்கப்பட்டு, அவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கவும் தடை விதிக்கப்படும். அவ்வகையில், மசூத் அசாரின் சொத்துகளை முடக்குவதாகவும், அவர் பயணிக்க தடை விதிப்பதாகவும் பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியிட்டுள்ளது. மேலும், மசூத் அசார் ஆயுதங்கள், வெடிபொருட்களை வாங்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மசூத் அசார் மீதான தடையின் அடிப்படையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தியுள்ளது. மசூத் அசார் மீதான தடைகளை பாகிஸ்தான் அரசு உடனடியாக அமல்படுத்தும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பேச்சாளர் முகமது பைசல் உறுதியளித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் மசூத் அசாருக்கு இருக்கும் சொத்துகளை அந்நாட்டு அரசு ஏற்கெனவே முடக்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புல்வாமா தாக்குதல், பதன்கோட் தாக்குதல், 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதல், ஜம்மூ காஷ்மீர் சட்டமன்றத்தில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதல் ஆகியவற்றுக்கு மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது அமைப்பே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon