மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

ஒடிசாவைத் தாக்கிய ஃபோனி மேற்கு வங்கம் நோக்கி நகர்வு!

ஒடிசாவைத் தாக்கிய ஃபோனி மேற்கு வங்கம் நோக்கி நகர்வு!

ஒடிசாவில் கரையை கடந்த ஃபோனி புயல் மேற்கு வங்கம் நோக்கி நகர்கிறது. இதனால் தனது பிரச்சாரத்தை ரத்து செய்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புயல் பாதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

வங்கக் கடலில் உருவான ஃபோனி புயல் தமிழக –ஆந்திர கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒடிசாவை நோக்கி நகர்ந்தது. உச்ச உயர் தீவிர புயலாக மாறிய ஃபோனி இன்று ஒடிசாவில் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டது.

வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்த ஃபோனி ஒடிசாவில் பூரி பகுதியில் இன்று (மே 3) கரையைக் கடந்தது. இன்று பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டநிலையில் காலை 8 மணிக்குத் தொடங்கி 11 மணியளவில் பூரி பகுதியில் ஃபோனி கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபோனி புயலின் கண் பகுதி கரையைக் கடந்த போது, மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளும் சேதமடைந்திருக்கின்றன. மரங்களும், மின்கம்பங்களும் விழுந்தன. இதனால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 11 லட்சம் பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்ததையடுத்து, பேரிடர் மேலாண்மை மீட்பு பணியைத் துரிதப்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து இந்திய கடலோர காவல் படையின் 2 கப்பல்கள் மீட்பு பணிகளுக்காக ஒடிசா விரைந்துள்ளன. சாகிகோபால் பகுதியில் மரங்கள் இடிந்து விழுந்ததால் ஒருவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. புயல் பாதிப்புகளுக்கு உதவிகள் பெற 1938 என்ற உள்துறை அமைச்சகத்தின் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1999ஆம் ஆண்டு ஒடிசாவைத் தீவிர புயல் தாக்கிய நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஃபோனி தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒடிசாவில் கோரத்தாண்டவம் ஆடிய ஃபோனி தற்போது மேற்கு வங்கம் நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது அனைத்து பிரச்சார பயணங்களையும், ரத்து செய்து புயல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon