மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

பன்னீர்செல்வம் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: தினகரன்

பன்னீர்செல்வம் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: தினகரன்வெற்றிநடை போடும் தமிழகம்

பன்னீர்செல்வம் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

காலியாகவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நான்கு தொகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் மையமிட்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் நான்கு தொகுதிகளும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் இரண்டாவது நாளாக நேற்று (மே 2) அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வெற்றி தியேட்டர் பகுதியில் மக்கள் மத்தியில் பேசிய அவர், “தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க, தமிழர்களின் வாழ்வை மலரச் செய்ய நீங்கள் வாக்களிக்க உள்ளீர்கள். முன்பு எடப்பாடி அரசுக்கு எதிராக திமுகவுடன் இணைந்துகொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்களித்த பன்னீர்செல்வம்தான், இன்றைக்கு, தான் இறக்கும்போது அதிமுக கொடியைப் போர்த்த வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார். மோடி சொன்னதால்தான் பழனிசாமியுடன் இணைந்து துணை முதல்வர் பதவியை ஏற்றேன் என்று பன்னீர்செல்வம் கூறுகிறார். அதிமுகவுக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, “தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவில்லை எனில் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும்தான் தலைவணங்குவோமே தவிர, வேறு எந்தக் கொம்பனுக்கும் தலைவணங்க மாட்டோம். எங்களை அடிமைப்படுத்த யாராலும் முடியாது” என்று குறிப்பிட்டவர்,

இடைத் தேர்தலில் 22 இடங்களில் வெற்றிபெறுவோம் என்றும் தமிழக மக்களின் ஆதரவும் அமமுகவுக்குத்தான் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்ட பழனிசாமி அரசு, மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கும் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்றும் விமர்சித்தார்.

தொடர்ந்து சிந்தாமணி, சின்ன அனுப்பானடி, நாகம்மா கோயில், குமார் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் தினகரன் பிரச்சாரம் செய்தார்.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon