மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஜூலை 2020

ஜெயில் பின்னணி இசை: நெகிழ்ந்த வசந்தபாலன்

ஜெயில் பின்னணி இசை: நெகிழ்ந்த வசந்தபாலன்

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் பின்னணி இசையைக் கேட்ட வசந்தபாலன், அந்த அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தீவிரமான படைப்புகளுக்குப் பெயர்பெற்ற வசந்தபாலன், சென்னை மாநகரில் உழைக்கும் மக்களை

அவர்கள் வசிக்கும் இடங்களிலிருந்து அகற்றி நகருக்கு வெளியே குடியமர்த்தப்படுவதை மையமாகக்கொண்டு ஜெயில் படத்தை இயக்கிவருகிறார். அதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் தற்போது அதன் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு அவரே இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையைக் கேட்ட வசந்தபாலன், அந்த அனுபவத்தைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பதிவில்:

ஜெயில் திரைப்படத்தின் கடைசி ரீலுக்கான பின்னணி இசை எழுதும் வேலை மே 1 அன்று முடிந்தது. இப்போதுதான் வீடு திரும்பி நீர்மையின் கைகளில் என்னை நான் ஒப்படைத்து விட்டு அமர்கிறேன். ஜீவியின் விரல்களில் வழிந்த இசை என் ஆழ்மன உணர்ச்சியை ஆழம் பார்த்தது. ரசிகனையும் விடாது. தவிர்க்கமுடியாத விசையொன்றால் ஈர்க்கப்படுபவனைப்போல் இசையின் சுழற்சியில் மனம் முன்னும் பின்னும் பம்பரமாய் சுழன்றாடியது.

காட்சியும் இசையும் ஒன்றையொன்று புதுமண தம்பதி போல கைகோத்துகொண்டு என் முன் உலாவர கண்ணீர் என்னையறியாமல் விழியில் வழிந்தது. மிக அழுத்தமாகக் காட்சி பிம்பம், அந்த பிம்பத்தின் உணர்ச்சி இருமடங்காக ஆக்கும் இசை. என் இசையின் மொழி ஜி.விக்கு எளியதாக புரியும். இப்போது க்ளைமாக்ஸ் காட்சியைப் பார்க்கையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தது.

பின்னணி இசை கோர்ப்பு வேலைகள் பம்பாயில் முடிவுற்று முழுப்படத்தை பார்க்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன். மனதால் ஜீவியை இறுக அணைத்துக்கொண்டேன். இந்த முறை அர்ச்சுனா உன் இலக்கு தப்பாது என்று மனம் சொன்னது. காலதேவன் துணையிருக்கட்டும். இசை இருபுறங்களிலுமாக மாறி மாறி ஒலித்து உளமயக்கை உருவாக்கியது. மனம் கொந்தளிப்பு அடங்கியது.

ஜெயில் தன்னுடலையே சிறகாக்கிக்கொண்டு பறக்கும் நாளுக்காய் காத்திருக்கிறது. ஜெயில் தன் விடுதலையை தானே தேடிக்கொள்ளும்.

இவ்வாறு வசந்தபாலன் பதிவிட்டுள்ளார்.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon