மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

யானைக்கு முத்தம்: மருத்துவமனையில் இளைஞர் அனுமதி!

யானைக்கு முத்தம்: மருத்துவமனையில் இளைஞர் அனுமதி!

திரைப்படத்தில் வருவது போன்று யானைக்கு முத்தமிட முயன்ற கர்நாடக இளைஞர் ஒருவர், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது தோத்தி எனும் கிராமம். இது பெங்களூருவிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது. கடந்த சில நாட்களாக, இப்பகுதியில் விளைந்துள்ள வெள்ளரி, வாழைத் தோப்புகளில் புகுந்து வருகின்றன காட்டு யானைகள். இவற்றை விரட்ட உள்ளூர் மக்களும் வனத் துறையினரும் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். சில நபர்கள் விபரீதமாக யானைகளுடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்வதும் நடக்கின்றன. இதனால் யானைகள் ஆத்திரமடைவதாக வனத் துறையினர் அப்பகுதி மக்களை எச்சரித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (மே 1) நண்பர்களுடன் அப்பகுதிக்குச் சென்றார் ராஜு என்ற 24 வயது இளைஞர். குடிபோதையிலிருந்த அவர், திரைப்படங்களில் வருவது போல யானைக்கு முத்தமிடப் போவதாக நண்பர்களிடம் சவால் விடுத்தார். இதன்படியே ஒரு யானையின் அருகில் சென்றார். அவரது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த யானையால், அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். இதையடுத்து, அவர் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon