மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

ஒரு சொல் கேளீரோ! - அரவிந்தன்

ஒரு சொல் கேளீரோ! - அரவிந்தன்வெற்றிநடை போடும் தமிழகம்

தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்

மொழி மனிதர்களிடையேயான தொடர்புக்கு முக்கியமான ஆதாரம். மொழியின் வழியாகத்தான் நாம் செய்திகளையும் சிந்தனைகளையும் பரிமாறிக்கொள்கிறோம். எனவே, மொழியும் அந்த மொழியை முறையாகக் கையாள்வதும் மிகவும் அவசியம்.

தனிநபர்கள் மட்டுமின்றி, ஊடகங்களிலும் மொழியைக் கையாள்வதில் பல வித்தியாசங்கள் உள்ளன. சில அம்சங்கள் மாறுபடலாம். ஆனால், அடிப்படையான அம்சங்களில் மொழியின் ஆகிவந்த முறைமைகளையே அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு மொழியின் அடிப்படைத் தன்மைகளை ஒவ்வொருவரும் தன் விருப்பம்போல மாற்றிக்கொள்ள முடியாது.

தமிழ் போன்ற தொன்மையான ஒரு மொழி விஷயத்தில் அடிப்படைகளைத் தன் விருப்பப்படி மாற்றிக்கொள்ள யாருக்கும் உரிமை கிடையாது. நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு சில விஷயங்களை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். ஆனால், அடிப்படைகளைக் கற்று, பின்பற்றுவதே சரியானது.

தமிழ் இலக்கணமும் சொற்களைப் பயன்படுத்தும் விதமும் தர்க்க ரீதியானவை. மொழிப் பயன்பாடு விஷயத்தில் எந்தப் பிரச்சினை என்றாலும் அதற்குத் தமிழில் தெளிவான விளக்கம் இருக்கும். அதற்கு உரிய காரணம் இருக்கும்.

உதாரணமாக, “இதோ வந்துவிட்டேன்” என்று சொல்லுவோம். இன்னும் வரவில்லை, ஆனால், மிக விரைவில் வந்துவிடுவோம் என்று இதற்குப் பொருள்.

வந்துவிட்டேன் என்பது கடந்த காலத்தைக் குறிக்கும் சொல். ஆனால், அதை எதிர்காலத்தைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம். உடனடியாக வந்துவிடுவோம் என்பதைக் குறிக்கவே இத்தகைய பயன்பாடு. சொல்பவரின் மனதில் இருக்கும் அவசர உணர்வு இதன் மூலம் கடத்தப்படுகிறது. ஆனால், வந்துவிட்டேன் என்பது கடந்த காலத்தைக் குறிக்கும் சொல். இதை எப்படி எதிர்காலத்துக்குச் சொல்லலாம்?

கால வழுவமைதி என்று இதற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். கால வழு என்றாலும் அதற்கொரு சமாதானம் (அமைதி – சமாதானம்) கூறி ஏற்றுக்கொள்வதால் இது கால வழுவமைதி ஆகிறது.

தமிழ் இலக்கணம் கடல் போன்றது. எல்லாவற்றையும் உரிய காரணங்களோடு வகுத்து வைத்திருக்கிறது. மேலே காணப்படுவது ஓர் உதாரணம் மட்டுமே. இந்த விதிகளை அறிந்து, முறையாகக் கடைப்பிடிக்க வேண்டிய கடமை மொழியின் மீது அக்கறை உள்ளவர்களுக்கு இருக்கிறது.

ஒரு சில அளவுகோல்கள் அனைவருக்கும் பொது. உதாரணமாக, ஒருமை, பன்மை விஷயத்தில் யாரும் எந்தச் சலுகையும் எடுத்துக்கொள்ள முடியாது. அவன் வந்தான் என்றும் அவர்கள் வந்தார்கள் என்றும்தான் எழுத வேண்டும். அவர்கள் வந்தான் என்று எழுத முடியாது.

அதேபோல, பால் வேற்றுமை. அவள் சிரித்தான், அது நடந்தான், அவன் ஓடினாள் என்றெல்லாம் எழுத முடியாது.

அறியாமையாலும் அலட்சியத்தினாலும் பல விதிகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. இதனால் மொழிச் சிதைவு ஏற்படுவதுடன் புரிந்துகொள்வதிலும் குழப்பம் ஏற்படுகிறது.

தமிழ் மொழியின் தவிர்க்கக் கூடாத சில விதிகளையும் பிழையற்ற தமிழ் நடைக்குத் தேவையான பொதுவான சில கூறுகளையும் இந்தத் தொடரில் பார்ப்போம்.

(தொடரின் அடுத்த பகுதி வரும் திங்களன்று)

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon