மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

உருளை விவசாயிகள் மீதான வழக்கு வாபஸ்: பெப்சிகோ!

உருளை விவசாயிகள் மீதான வழக்கு வாபஸ்: பெப்சிகோ!

குஜராத் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக பெப்சிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. அம்மாநில அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வழக்கை வாபஸ் பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தங்கள் நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.சி.5 ரக உருளைக்கிழங்கை விதிமுறைக்குப் புறம்பாக உற்பத்தி செய்வதாக குஜராத்தைச் சேர்ந்த ஒன்பது விவசாயிகள் மீது தனித்தனியாக பெப்சிகோ இந்தியா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அகமதாபாத்தில் உள்ள வணிக நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்கு தொடர்ந்தது. லேஸ் சிப்ஸ் தயாரிப்பதற்காக இந்த வகை உருளைக் கிழங்கைப் பயன்படுத்தி வருவதாகவும் தங்கள் அனுமதி இல்லாமல் பயிரிட்ட விவசாயிகள் தங்களுக்கு ரூ.1.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என்று குஜராத் அரசும் உறுதி அளித்திருந்தது.

இந்த நிலையில் விவசாயிகள் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுவதாக பெப்சிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குஜராத் அரசுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும், இதையடுத்து வழக்கை வாபஸ் பெற இருப்பதாகவும் பெப்சிகோ நிறுவனத்தின் இந்திய செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெப்சிகோ நிறுவனத்தால் காப்புரிமை பெறப்பட்ட உருளைக்கிழங்கு விதைப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் சுமுகமான, நீண்ட காலத் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையை நாங்கள் நம்பியிருக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon