மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

ஃபோனி: ஒடிசாவில் இன்று கரையைக் கடக்கும்!

ஃபோனி: ஒடிசாவில் இன்று கரையைக் கடக்கும்!

ஃபோனி புயல் இன்று காலை 11 மணியளவில் ஒடிசாவில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 25ஆம் தேதியன்று வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறியது. ஃபோனி என்று பெயரிடப்பட்ட இது மிகக் கடுமையான புயலாக மாறி, ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 11 மணியளவில் ஒடிசா மாநிலம் பூரி அருகே கோபால்பூர்-சந்த்பாலிக்கு இடையே ‘பானி’ புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் கண் பகுதி என்று சொல்லப்படும் மையப்பகுதி 2 மணியளவில் கரையை தாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புயல் காரணமாக வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மணிக்கு 200 கி.மீ. வேகத்துக்கு சூறைக்காற்று வீசும். இது ஆந்திரா, மேற்கு வங்காள மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

புயல் ஆபத்து உள்ள பகுதிகளில் இருந்து மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் நடவடிக்கையை ஒடிசா மாநில அரசு நேற்று காலை தொடங்கியது. அவர்கள் வீடுகள் போன்ற வசதிகளுடன்கூடிய பல்நோக்கு தங்கும் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 8 லட்சம் பேர் இப்படி வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஒடிசா மாநில அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon