மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

ஆந்திராவில் ஐந்து வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல்!

ஆந்திராவில் ஐந்து வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல்!

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஐந்து வாக்குச் சாவடிகளில் வரும் மே 6ஆம் தேதி மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

ஆந்திராவில் ஏப்ரல் 11ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்தபோது சில வன்முறை சம்பவங்கள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தது எனக் கூறி நெல்லூர், குண்டூர், பிரகாசம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஐந்து வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என மூன்று மாவட்ட ஆட்சியர்கள் அம்மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் ஆந்திரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ண திவேதி ஐந்து வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என வைக்கப்பட்டுள்ள முன்மொழிதலை டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் அந்த ஐந்து வாக்குச் சாவடிகளிலும் மறு வாக்குப் பதிவு நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி மே 6ஆம் தேதி, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய இரண்டுக்கும் ஒரே சமயத்தில் ஐந்து வாக்குச் சாவடிகளிலும் மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் நேற்று (மே 2) அறிவித்துள்ளது.

இதன்படி, நரசரோபேட் சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடிக்கும், குண்டூர் மக்களவை மற்றும் குண்டூர் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடிக்கும், யெரகோண்டபலேம் சட்டமன்றம் மற்றும் ஒங்கோல் மக்களவைத் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கும், கோவூர் சட்டமன்றம் மற்றும் நெல்லூர் மக்களவைத் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கும், சூலூர்பேட்டை சட்டமன்றம் மற்றும் திருப்பதி மக்களவைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடிக்கும் மறுதேர்தல் நடக்கவுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வெள்ளி, 3 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon