மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 29 ஜன 2020

டிஜிட்டல் திண்ணை: கடத்தப்பட்ட தினகரன் எம்.எல்.ஏ. எங்கே?

டிஜிட்டல் திண்ணை:  கடத்தப்பட்ட  தினகரன் எம்.எல்.ஏ. எங்கே?

மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. முதலில் நேற்று வெளியான டிஜிட்டல் திண்ணையின் லிங்க் வந்து விழுந்தது. இதன் தொடர்ச்சியாக சில நிமிடங்களில் அதன் ஃபாலோ அப் வந்தது.

“சபாநாயகரால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோரில் வயதில் இளையவரான பிரபுவை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆட்கள் நேற்று முன் தினம் தங்கள் கஸ்டடிக்கு கொண்டு சென்றுவிட்டதை நேற்றைய டிஜிட்டல் திண்ணை யில் விளக்கியிருந்தேன். மின்னம்பலம் இந்த செய்தியை வெளியிட்ட பிறகுதான் பிரபு எங்கே என்ற கேள்வி மற்ற ஊடகங்களுக்கும் எழுந்திருக்கிறது.

நேற்று முன் தினம் சென்னை எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் இருந்து புறப்பட்ட எம்.எல்.ஏ. பிரபு அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆட்களின் கண்காணிப்பில் கள்ளக்குறிச்சி தியாகதுருகத்திலுள்ள தனது வீட்டுக்குச் சென்றார். டிடிவி தினகரனின் உதவியாளர் உட்பட அமமுக நிர்வாகிகள் பலர் போன் செய்தும் அவர் எடுக்கவே இல்லை.

இந்த நிலையில் பிரபுவை தங்கள் பக்கம் கொண்டுவந்துவிட்ட அதிமுக, அவர் மூலமே மற்ற இரு எம்.எல்.ஏ.க்களையும் இழுக்க தீவிர முயற்சியெடுத்து வருகிறது. யாரிடமும் செல்போனில் பேசாமல் அமைதிகாக்கும் பிரபு நேற்று (மே 1) இரவு 11 மணிக்கு கள்ளக்குறிச்சி தியாகத்துருகத்திலுள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை சென்னை வந்துவிட்டார். அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதவாளர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரபுவை எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக்கு அழைத்துச் செல்லாமல் சென்னையில் ஒரு ஹோட்டலில் தங்க வைத்திருக்கிறார்கள்.

நேற்று பகலில் அந்த ஹோட்டலில் இருந்து சக எம்.எல்.ஏ.க்களான கலைச்செல்வனுக்கும், ரத்தினசபாபதிக்கும் போன் போட்டிருக்கிறார் பிரபு. அவர்களை தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வரச் சொல்லியிருக்கிறார். இரண்டு நாட்களாக பிரபுவின் தொடர்பு கிடைக்காமல் இருந்த அந்த எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பிரபுவை பார்க்க அந்த ஹோட்டலுக்கு சென்றார்கள். பிரபுவைப் பார்த்ததுமே ரத்தினசபாபதி தனக்கே உரிய பாணியில் அவரிடம் கோபித்துக் கொண்டிருக்கிறார். ‘என்னாப்பா நீ... எங்கே போனே. போன் போட்டா கூட எடுக்க மாட்டேங்குறே?’ என்று கேள்விகளால் துளைத்திருக்கிறார். இரு எம்.எல்.ஏ.க்களுமே உடனே தங்களின் செல்போன் மூலம் தினகரனுக்கு போன் செய்து அவரிடம் பிரபுவை பேச வைக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் தினகரனோடு பேசவே முடியாது என்று மறுத்துவிட்டார் பிரபு.

சி.வி.சண்முகத்தின் ஆட்கள் தன் வீட்டுக்கு சென்றது முதல், தான் ஹோட்டலுக்கு வந்தது வரை நடந்ததை எல்லாம் அவர்களிடம் விவரமாக எடுத்துக் கூறிய பிரபு, ‘நான் இப்ப இங்க இருக்கேன். நீங்களும் இந்தப் பக்கம் வந்துடுங்க’ என்று அழைத்திருக்கிறார். அதாவது பிரபு மூலமாக மற்ற இரு எம்.எல்.ஏ.க்களையும் அதிமுக பக்கமே கொண்டுவரும் திட்டம்தான் இது. பிரபு அப்படி கேட்டதும் கலைச்செல்வனும், ரத்தினசபாபதியும் அவரிடம் கோபமாக பேசியிருக்கிறார்கள். ‘ஏன் உனக்கு இந்த வேலை. இவ்ளோ நாள் இங்கதான இருந்தே. இப்ப என்ன திடீர்னு?’ என்று கேட்ட இரு எம்.எல்.ஏ.க்களும் ஹோட்டலில் இருந்து புறப்பட்டுவிட்டனர்.

இந்தத் தகவல் தினகரனுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது என்று கண்காணித்து சொல்லுங்கள் என சொல்லியிருக்கிறார் தினகரன். இப்போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கிறார் தினகரன். சென்னை மண்டலப் பொறுப்பாளர் வெற்றிவேலும் அவருடன் சென்றிருந்தார். தினகரன், வெற்றிவேல் ஆகிய இருவரும்சென்னையில் இல்லாத நிலையில்தான் பிரபுவை சென்னை அழைத்து வந்து அவர் மூலமாகவே மற்ற இரு எம்.எல்.ஏ.க்களையும் மீண்டும் எடப்பாடிக்கு ஆதரவு நிலை எடுக்க வைக்கும் எல்லா முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. தினகரன் மீண்டும் சென்னை வருவதற்குள் மீதமிருக்கும் இரு எம்.எல்.ஏ.க்களையும் தங்கள் பக்கம் கொண்டுவருவதற்கு அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஏற்பாட்டில் சகல விதமான அஸ்திரங்களும் ஏவப்பட்டு வருகின்றன.

பிரபு மீண்டும் அதிமுகவுக்குள் வருவதை கள்ளக்குறிச்சி லோக்கல் அதிமுக புள்ளிகள் சிலர் விரும்பவில்லை. அதனால்தான் முழுக்க முழுக்க சி.வி. சண்முகமே இந்த ஆபரேஷனில் இறங்கியிருக்கிறார். விரைவில் மூன்று எம்.எல்.ஏ.க்களையும் கொண்டுவந்து எடப்பாடி முன்பு நிறுத்துவதாக சபதம் போட்டிருக்கிறார் சி.வி. சண்முகம்” என்று முடிந்தது வாட்ஸ் அப்.

அந்த் தகவலை ஷேர் செய்த ஃபேஸ்புக் தனது சுவரில் ஒரு தகவலைப் பதிவிட்டது.

“நேற்று இரவு ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட திடீர் அறிக்கை அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக என்ற கட்சியின் தலைமைப் பொறுப்பான ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வம், ‘நான் கட்சிமாற மாட்டேன்’ என்று அறிக்கை விடுவது ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது என்கிறார்கள் அவர்கள். இதன் மூலம் கட்சியில் தனது பிடிமானத்தை அவர் இழந்துவிட்டது தெளிவாக தெரிகிறது என்றும் வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். ‘தனக்கு கீழ கட்சியில இருக்கிறவங்க விட வேண்டிய அறிக்கையை எல்லாம் இவரே வெளியிட்டிருக்காரு. இதுவரைக்கும் தர்மயுத்த ஆதரவாளர்களுக்கு எதுவுமே செய்யாத ஓ.பன்னீர் இப்போது எடப்பாடியிடம் கிட்டத்தட்ட தோல்வி அடைந்ததைதான் இந்த அறிக்கை காட்டுகிறது. இது எடப்பாடிக்கு கிடைத்த வெற்றி. எல்லாத்தையும் அம்மா மேல இருந்து பாத்துக்கிட்டிருக்காங்கனு பிரச்சாரத்துல பேசுறாரு. ஆனா இதையெல்லாம் அம்மா பார்த்தா என்ன செய்வாங்க தெரியுமா?’ என்று தனது வட்டத்தில் ஓப்பனாகவே கமெண்ட் அடிக்கிறார்கள் பன்னீருக்கு நெருக்கமான சீனியர் நிர்வாகிகள்” என்ற தகவலைப் பதிவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

வியாழன், 2 மே 2019

அடுத்ததுchevronRight icon