மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 29 ஜன 2020

சிபிஎஸ்இ: பிளஸ் 2 தேர்வில் 83.4% தேர்ச்சி!

சிபிஎஸ்இ: பிளஸ் 2 தேர்வில் 83.4% தேர்ச்சி!

இன்று சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 83.4 சதவிகித மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு நடந்தது. இதனை 12.87 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று (மே 2) மதியம் வெளியானது. இதில் 83.4 சதவிகிதம் மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 88.7 சதவிகிதம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 79.4 சதவிகிதம் ஆகும்.

நாட்டிலேயே அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 98.2 சதவிகிதம், சென்னையில் 92.93 சதவிகிதம், டெல்லியில் 91.87 சதவிகிதம் மாணவ மாணவியர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 98.54% எனவும், திபெத்திய பள்ளிகளில் 96% எனவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 88.49% எனவும், தனியார் பள்ளிகளில் 82.59% எனவும் தேர்ச்சி விகிதம் உள்ளது. இதன் மூலமாக, தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ஹன்சிகா சுக்லா மற்றும் முசாபர்நகரைச் சேர்ந்த கரீஷ்மா அரோரா ஆகிய மாணவிகள் 500க்கு 499 மதிப்பெண் பெற்று சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளனர். 498 மதிப்பெண் பெற்று 3 பேர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கும், அவர்களது பெற்றோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதே போல மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும் சிபிஎஸ் இ தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbse.examresults.net, cbseresults.nic.in, results.gov.in என்ற இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon