மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 20 ஜன 2020

பாம்புகளுடன் விளையாடிய பிரியங்கா காந்தி

பாம்புகளுடன் விளையாடிய பிரியங்கா காந்தி

உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது கிழக்கு உபி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பாம்பாட்டிகள் வைத்திருந்த பாம்புகளுடன் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 3 கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,

காங்கிரஸ் கிழக்கு உபி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்திக்காகவும், தாய் சோனியா காந்திக்காகவும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். அண்மையில். வயநாட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, ராகுலை நேரில் சந்திக்க விரும்பிய அப்பகுதி சிறுவன் நந்தனை நேரில் சந்தித்துப் பேசினார்.

இதுமட்டுமின்றி பிரியங்கா காந்தி பிரச்சாரத்திற்குப் போகும் இடங்களில் பொதுமக்களுடன் சகஜமாக பேசி வரவேற்பை பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று (மே 2) ரேபரேலியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாம்பாட்டிகள் அதிகம் வசிக்கும் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அவர்களுடன் சகஜமாக அமர்ந்து பாம்பாட்டிகளின் குறைகளை கேட்டறிந்தார். இந்த பகுதியில் தங்களை போன்று 200 குடும்பங்கள் உள்ளதாகத் தெரிவித்த அவர்கள், தங்களது தொழில் மற்றும் வாழ்வாதாரம் குறித்துத் தெரிவித்துள்ளனர்.

அப்போது, பாம்பாட்டி ஒருவர் தான் வைத்திருந்த பாம்பு பெட்டிகளைத் திறந்து காட்டினார். அதில் இருந்த பாம்புகளையும் கையில் எடுத்து பிரியங்கா காந்தி விளையாடினார். அவருடன் வந்தவர்கள் எச்சரித்தபோதும், ‘பயம் கொள்ள வேண்டாம். அது எதுவும் செய்யாது. நன்றாக இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்கா காந்தி, ”காங்கிரஸ், பாஜக கருத்துகள் தேர்தலுக்கு அப்பாற்பட்டது. அரசியலில் பாஜக தான் எங்கள் எதிரி. ஒருபோதும் பாஜகவிற்குச் சாதகமான சூழல் உருவாக விடமாட்டோம். ஏனென்றால் வலிமையான வேட்பாளர்களை நாங்கள் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon