மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 27 ஜன 2020

மதுரையில் விதிமுறை மீறல் நடந்துள்ளது: அதிகாரி அறிக்கை!

மதுரையில் விதிமுறை மீறல் நடந்துள்ளது: அதிகாரி அறிக்கை!

மதுரை வாக்குப் பதிவு எண்ணும் மையத்தில் தாசில்தார் நுழைந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை கூடுதல் தேர்தல் அதிகாரி பாலாஜி தாக்கல் செய்துள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மையத்தில் நுழைந்த கலால் வரி வட்டாட்சியர் சம்பூரணம் ஆவணங்களை எடுத்துச் சென்று நகல் எடுத்து வந்தது பரபரப்பை உண்டாக்கிய நிலையில், இதனை மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து வட்டாட்சியர் சம்பூரணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் சம்பூரணத்துக்கு உதவியாக இருந்ததாகக் கூறி ஆவணப்பதிவு எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி மண்டல அதிகாரிகள், ராஜபிரகாஷ், சூர்யபிரகாஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக தமிழகக் கூடுதல் தலைமைத் தேர்தல் ஆணையர் பாலாஜி விசாரணை நடத்த தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு உத்தரவிட்டிருந்தார். விசாரணை முடிந்த நிலையில் அது தொடர்பான அறிக்கையை கூடுதல் தேர்தல் ஆணையர் பாலாஜி, சத்திய பிரதா சாஹுவிடம் தாக்கல் செய்தார். இதற்கிடையே சு.வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவர் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் கூடுதல் தலைமை தேர்தல் ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில், “மதுரை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன் உத்தரவின்பேரில் மேற்கு தொகுதி கூடுதல் தேர்தல் அலுவலர் குருச்சந்திரன் ஆலோசனையில் உதவி தேர்தல் அலுவலர் சம்பூரணம் மற்றும் அலுவலர்கள் சம்பவத்தன்று மதியம் 3.20 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் மேற்கு தொகுதியிலுள்ள 277 வாக்குச்சாவடிகளிலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான வாக்குகள் மற்றும் வாக்காளர்கள் கையெப்பமிட்ட ஆவணங்கள் (17 ஏ படிவம்) ஆகியவற்றை நகல் எடுப்பதற்காக வெளியே கொண்டுசென்றுள்ளனர். நகல் எடுத்துவிட்டு 5.40 மணிக்கு அதனை வைக்க வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்துள்ளனர். அவர்களிடம் இதுதொடர்பாக அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் மங்கையர் திலகம் கேள்வி எழுப்பியிருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் விதிமுறை மீறல்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கு அரசு அதிகாரிகளும் போலீசாரும் உடந்தையாக இருந்துள்ளனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் உத்தரவின் பேரிலேயே அவர்கள் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் வாக்குச் சாவடி தலைமை அதிகாரி டைரியை (17 ஏ படிவம் எதற்காக கொண்டு சென்றனர் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் 6 அறைகளுக்கு சீல் வைக்கப்படவில்லை. அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon