மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 25 ஜன 2020

முதலில் சபாநாயகர், பிறகே 3 எம்.எல்.ஏ.க்கள்: ஸ்டாலின்

 முதலில் சபாநாயகர், பிறகே 3 எம்.எல்.ஏ.க்கள்: ஸ்டாலின்

உச்ச நீதிமன்ற விதிமுறைப்படி முதலில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்துதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகுதான் மூன்று எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் மே 19ஆம் தேதி சூலூர், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மீண்டும் பிரச்சாரக் களத்தில் இறங்கியுள்ளனர்.

ஓட்டப்பிடாரத்தில் நேற்று (மே 1) பகலில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், திமுக சார்பில் போட்டியிடும் எம்.சி.சண்முகையாவை ஆதரித்து இரவு திறந்தவெளி வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வரும் 23ஆம் தேதியுடன் எடப்பாடி ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்று தனது உரையைத் தொடங்கிய ஸ்டாலின், மக்களவைத் தேர்தலில் கனிமொழிக்கு ஓட்டுப் போட்டீர்களா என்று கேள்வி எழுப்பினார். பலரும் ஆமாம் ஆமாம் என்றனர். கனிமொழிக்கு ஓட்டு போட்டது போல சண்முகையாவுக்கு ஓட்டு போட வேண்டும் என்று வாக்கு சேகரித்தார்.

நான் மட்டும் வாக்கு சேகரிக்க வரவில்லை கனிமொழியும் என்னுடன் வந்துள்ளார், அண்ணனும் தங்கையும் சேர்ந்து வாக்கு சேகரிக்க வந்துள்ளோம் என்று கூறிய அவர், “மே 23ஆம் தேதி வெளியாகும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின் முடிவில் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 22 தொகுதிகளில் திமுகதான் வெற்றி பெறும். அதன்பிறகு தானாக திமுக ஆட்சிக்கு வந்துவிடும்” என்றார். ஏற்கெனவே திமுக அணிக்கு 97 பேர் சட்டமன்றத்தில் இருப்பதாகவும், இந்த 22 பேரும் சேர்ந்துவிட்டால் 119 பேர் ஆகிவிடுவார்கள் என்றும் கூறிய ஸ்டாலின், “234இல் பாதி 117 தான். எனவே இடைத்தேர்தல் முடிவில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும்” என்று தெரிவித்தார்.

மேலும், “திமுக வெற்றி பெறும் என்பதை உளவுத் துறை மூலம் தெரிந்துகொண்டு, இனி ஆட்சியில் இருக்க முடியாது என்பதை ஆளும்கட்சியினர் அறிந்துகொண்டனர். எனவே மூன்று பேரை தகுதி நீக்கம் செய்தால் அதிக இடத்திலிருந்தாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது என்பதற்காகத்தான் மூன்று எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாகப் பேசினார்.

இது ஜனநாயகப் படுகொலை என்ற அவர், “இதைத் தடுக்க வேண்டும் என்பதால்தான், சபாநாயகர் மேல் நம்பிக்கை இல்லை. அவரது பதவியைப் பறிக்க வேண்டும் என நாங்கள் கடிதத்தைக் கொடுத்தோம். கடிதம் கொடுத்ததன் மூலம் உச்ச நீதிமன்ற விதிமுறைப்படி முதலில் சபாநாயகர் மீதான கடிதம் குறித்துதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகுதான் மூன்று எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இது தான் முறை” என்றார்.

மோடியின் ஆட்சி என்பது மிகவும் கொடுமையான ஆட்சி என்று கூறிய அவர், “எடப்பாடி ஆட்சி பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத அக்கிரமமான ஆட்சி. மோடிக்கு எப்படி ஏப்ரல் 18ஆம் தேதி கடைசி பெல் அடித்தோமோ, அதுபோன்று எடப்பாடிக்கும் கடைசி பெல் அடிக்க வேண்டும்” என்று வாக்கு சேகரித்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்குக் கலைஞர் ஆட்சியில் வழங்கிய நிலங்களை, அபகரித்து கனிம வளங்களை ஒரு கூட்டம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது என்றும் அந்தக் கூட்டத்துக்கு சண்முகையாவை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்தான் தலைவர் என்றும் குற்றம்சாட்டினார் ஸ்டாலின்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon