மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 27 ஜன 2020

மோடி, அமித்ஷா வழக்குகள்: விவரம் கேட்கும் உச்ச நீதிமன்றம்!

மோடி, அமித்ஷா வழக்குகள்: விவரம் கேட்கும் உச்ச நீதிமன்றம்!

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா மீது உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினரும், அனைத்திந்திய மகிளா காங்கிரஸ் தலைவருமான சுஸ்மிதா தேவ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மோடியும் அமித்ஷாவும் தேர்தல் பிரச்சாரங்களில் வெறுப்புப் பேச்சுக்களை பேசி வருவதாகவும், ராணுவப் படைகளின் செயல்பாடுகளை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தி வருவதாகவும், மே 23ஆம் தேதி மோடி குஜராத்தில் ஓட்டு போட்ட பிறகு தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஊர்வலமாக நடந்து சென்றதாகவும் அந்த மனுவில் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கில் நேற்று (மே 1) பதிலளித்த தேர்தல் ஆணையம், “பிப்ரவரி மாதம் புல்வாமாவில் இறந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்காக முதல்முறை ஓட்டு போடும் வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்த வேண்டும் என்று மோடி கூறியதில் தேர்தல் நடத்தை விதிமீறல் எதுவும் இல்லை. சிறுபான்மையினர் அதிகம் இருப்பதால்தான் கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்று மகராஷ்டிரத்தின் வார்தா மாவட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி நடந்த தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியது தேர்தல் விதிமீறல்தான்” என்று கூறியது.

இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கானா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்றும் இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் ஆணையம் அமித்ஷா மற்றும் மோடி மீதான தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் செயலற்று உள்ளது என்று குற்றம்சாட்டினார். இதையடுத்து இருவர் மீதும் உள்ள தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த விவரங்களை இவ்வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் மே 6ஆம் தேதி அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இருவர் மீதும் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 11 வழக்குகள் இருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon