மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 25 ஜன 2020

சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

அந்நிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலாவை மே 13ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று பெங்களூரு சிறைத் துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1996-97ஆம் ஆண்டு கால கட்டத்தில் ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது அக்கா மகன் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அந்நிய செலாவணி மோசடி வழக்குகளை அமலாக்கத் துறை பதிவு செய்தது. கொடநாடு டீ எஸ்டேட் வாங்கியதில் பல கோடி ரூபாய் வெளிநாடுகளில் இருந்து பணப்பரிமாற்றம் செய்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து இருவர் மீதும் 4 வழக்குகள் பதியப்பட்டன.

இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்கிடையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.

அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் காணொலிக் காட்சி மூலம் அவர் மீது குற்றச்சாட்டை பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மொத்தம் நான்கு வழக்குகளில் கடந்த டிசம்பர் மாதம் இரு வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி எஞ்சிய இரண்டு வழக்குகள் மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சசிகலா தன் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும், இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யாக புனையப்பட்டவை. எனவே அரசுத் தரப்பு சாட்சிகளைத் தனது தரப்பில் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் காணொலி காட்சி மூலம் ஆஜராகி சசிகலா கோரிக்கை விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து அரசுத் தரப்பு சாட்சிகளிடம், சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சாட்சிகள் தெரிவித்த விவரங்கள் குறித்து சசிகலாவிடம் விளக்கம் கேட்க மே 13ஆம் தேதி அவரை நேரில் ஆஜர்படுத்த பெங்களூரு சிறைத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளுக்கு அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon