மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 25 ஜன 2020

நீர்நிலைகள் பாதுகாப்பு: உயர் நீதிமன்றம் கவலை!

நீர்நிலைகள் பாதுகாப்பு: உயர் நீதிமன்றம் கவலை!

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறினால், எதிர்காலச் சந்ததியினர் தண்ணீரைக் குப்பியில்தான் பார்க்க வேண்டிய அவலநிலை ஏற்படும் என்று கவலை தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது, பல டிஎம்சி மழை நீர் வீணாகக் கடலில் கலந்தது. இவ்வாறு மழை நீர் கடலில் கலப்பதைத் தடுக்க நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்று கோரி வி.பி.ஆர் மேனன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இன்று (மே 2) இந்த வழக்கை நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அப்போது, வருவாய்த் துறை ஆவணங்களில் ஏரி புறம்போக்கு என கூறப்படும் நிலங்களைப் பயன்படுத்தி, ஏரி மற்றும் குளங்களின் நீர்பிடிப்புப் பகுதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் மழை நீர் வீணாவதைத் தடுக்க முடியும் எனவும், நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் வெள்ள சேதங்களுக்குக் காரணமாக அமைகின்றன எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் தமிழகப் பொதுப்பணித் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னையில் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் இருந்த 10,347 ஆக்கிரமிப்புகளில் 4,161 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அடையாறு நதி 6.18 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்பட்டு நதிக்கரையோரம் 50 லட்சம் செலவில் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதே போல 56 பணிகளுக்கு 555 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்பை அகற்ற அரசு முழுமூச்சாகச் செயல்பட்டு வருவதாகவும், தமிழகம் முழுவதும் ஏரி குளங்களைப் பாதுகாக்க 100 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொதுப்பணித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாநிலம் முழுவதும் நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தலைமைச் செயலர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைக்க உத்தரவிட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், நீர் வழித் தடங்கள், கழிவு நீர் கால்வாய்களை 6 மாதங்களுக்குள் அளவீடு செய்ய வேண்டும் என்றும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த பணிகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்ட நீதிபதிகள், கடமை தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அது மட்டுமல்லாமல், நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறினால் நமது முன்னோர் ஆறு குளம் ஏரிகளில் பார்த்த தண்ணீரை, எதிர்காலச் சந்ததியினர் குப்பியிலும் கேப்சூலிலும் (capsule) தான் பார்க்க வேண்டிய அவலநிலை ஏற்படும் என்று வேதனை தெரிவித்தனர்.

“மக்கள் வரிப்பணத்தை இலவசங்கள் வழங்கப் பயன்படுத்துவதை விடுத்து, மக்களுக்குப் பயன்படும் வகையில் மாநிலம் முழுதும் கூடுதல் அணைகள் கட்டுவது குறித்துச் சிந்திக்க வேண்டும். இயற்கையின் வரப்பிரசாதமான நீரை வீணாக்கினால், தென்ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கேப்டவுன் நகருக்கு ஏற்பட்ட கதியைப் போல தமிழகத்திலும் தண்ணீர் இல்லா நாள் வரப்போவது வெகு தூரத்தில் இல்லை” என்று நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

மற்றொரு வழக்கில், ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை அடையாளம் காண சிறப்புப் பிரிவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர் நீதிபதிகள்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon