மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 20 ஜன 2020

ஜெயலலிதாவுக்கு பயந்து பணியாற்றுகிறோம்: பன்னீர்

ஜெயலலிதாவுக்கு பயந்து பணியாற்றுகிறோம்: பன்னீர்

ஜெயலலிதாவுக்கு பயந்து தாங்கள் பணியாற்றிவருவதாக திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் முனியாண்டி, திமுக சார்பில் மருத்துவர் சரவணன், அமமுக சார்பில் மகேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் ரேவதி, மக்கள் நீதி மய்யம் சார்பாக சக்திவேலும் களத்தில் உள்ளனர். அமமுக பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், தனது பிரச்சாரத்தை நேற்று திருப்பரங்குன்றம் தொகுதியில் தொடங்கினார்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் இன்று (மே 2) அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். அவர் பேசுகையில், “மக்களுக்குத் தேவையான பல்வேறு நலத் திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்.தமிழகத்தில் சாதி, மதக் கலவரங்கள் இல்லை. சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக திமுகவும், அதிமுகவிடமிருந்து பிரிந்து சென்ற துரோகிகளும் அரசை விமர்சித்துவருகின்றனர். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி, சாதிக்கட்சி ஆரம்பித்தவர்கள் யாராவது உருப்பட்டிருக்கிறார்களா என்றால் இல்லை” என்று விமர்சித்தார்.

அதனைத் தொடர்ந்து, “எடப்பாடியும், பன்னீரும் தமிழகத்தை தீவைத்து கொளுத்திக் கொண்டிருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் என்ன தீப்பந்தத்துடனா அலைந்து கொண்டிருக்கிறோம். ஜெயலலிதா தெய்வமாக மேலே இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். ‘ இவர்களை எல்லாம் முதல்வர், அமைச்சர்கள் ஆக்கிவிட்டு வந்தோமே, நாம் கொண்டுவந்த திட்டங்களை இவர்களை செயல்படுத்துகிறார்களா அல்லது குறைவைத்துக் கொண்டிருக்கிறார்களா’ என்று கவனித்துவருகிறார். அதற்கு பயந்துகொண்டு எங்கள் வேலையை செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் திமுகதான் மாமன் மச்சான் சண்டையில் மதுரை தினகரன் அலுவலகத்தை தீவைத்துக் கொளுத்தியது. திமுக ஆட்சியில்தான் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருந்தது” என்றும் குற்றம்சாட்டினார்.

திருப்பரங்குன்றம் வேட்பாளர் முனியாண்டி சாதாரண தொண்டர். மிகவும் எளிமையானவர். பால்வடியும் முகத்துக்கு சொந்தக்காரர். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறவைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon