மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 அக் 2019

விஷ்ணுவர்தனின் பாலிவுட் பிரவேசம்!

விஷ்ணுவர்தனின் பாலிவுட் பிரவேசம்!

பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கப்போகும் பாலிவுட் படம் பற்றிய அறிவிப்பு சற்று முன் வெளியானது.

குறும்பு படத்தின் மூலம் 2003ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமான இயக்குநர் விஷ்ணுவர்தன், தனது இரண்டாவது படமான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் கவனம் பெற்றார். அதன் பின் இவர் இயக்கிய பட்டியல், அஜித் நடித்த பில்லா மற்றும் ஆரம்பம் திரைப்படங்களின் மூலம் முன்னணி இயக்குநராக வலம் வந்தார். இவரது கடைசி படமான யட்சன் போதுமான வரவேற்பை பெறாவிட்டாலும், அஜித்தின் அடுத்த படம் இவரது இயக்கத்தில் தான் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும்வரை எப்போதும் இவர் பெயர் எதிர்பார்க்கப்படும்.

இந்நிலையில், சற்றும் எதிர்பார்க்காத வகையில் விஷ்ணுவர்தன் தன்னுடைய அடுத்த படத்தை தமிழில் இன்றி இந்தியில் இயக்கவுள்ளார். தர்மா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தயாரிக்கும் இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி நடிக்கின்றனர்.

பயோபிக் சீஸனான பாலிவுட்டில், கார்கில் போரில் ஈடுபட்ட கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இப்படம் தயாராகிறது. படத்திற்கு ‘ஷெர்ஷா’ என தலைப்பிடப்பட்டிருக்கிறது.

4 வருட இடைவெளிக்குப்பின், விஷ்ணுவர்தன் இயக்கும் படமிது. விஷ்ணுவர்தன் இதற்கு முன்பே, சந்தோஷ் சிவன் இயக்கிய பாலிவுட் வரலாற்றுப் படமான ஷாருக்கான் நடித்த அசோகா படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon