மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 அக் 2019

மூன்று எம்.எல்.ஏ.க்கள்: சபா அனுப்பிய 185 பக்க நோட்டீஸ்!

மூன்று எம்.எல்.ஏ.க்கள்: சபா அனுப்பிய 185 பக்க நோட்டீஸ்!

மூன்று எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் அவர்களுக்கு சென்று சேர்ந்துள்ளது. அடுத்த 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினகரனின் அமமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் மீது கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார் கொறடா ராஜேந்திரன். இதனை ஏற்று மூவருக்கும் விளக்கம் கேட்டு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது திமுக.

இப்படி அடுத்தடுத்து அரசியல் பரபரப்புகள் அரங்கேறிக்கொண்டிருக்கும் வேளையில், சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கும் பதிவுத் தபாலில் இன்று (மே 2) சென்று சேர்ந்துள்ளது. 185 பக்கங்கள் கொண்ட அந்த நோட்டீஸில் தினகரனுடன் மூவரும் இருக்கும் புகைப்படங்களும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன. மேலும், இதற்கு முன்பு பல்வேறு மாநில சட்டமன்றங்களில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் விவரங்களும், அவர்கள் ஏன் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதற்கான காரணங்களும், தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விவரங்களும் அதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. நோட்டீஸ் கிடைத்த அடுத்த 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினகரனுடன் மூவரும் இருக்கும் புகைப்படமும் நோட்டீஸில் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இதற்கு முன்பே மூவரும் விளக்கம் அளித்துள்ளனர். “டிவி தினகரனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது கட்சி விரோத நடவடிக்கை என்றால் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டவர்கள் சசிகலாவுடனும், தினகரனோடும் படம் எடுத்துக்கொண்டவர்கள் தானே?” என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நோட்டீஸுக்கு மூன்று எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகரிடம் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ விளக்கம் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 19 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கொறடா பரிந்துரை செய்திருந்த நிலையில், அதில் ஜக்கையன் திடீரென ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மாறி, சபாநாயகரிடம் நேரில் விளக்கம் அளித்தார். இதனால் அவர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதுபோன்ற ஒரு விளக்கத்தை மூன்று பேரும் சபாநாயகரிடம் அளிப்பர் என்கிறார்கள் அமமுகவினர்.

இடைத் தேர்தல் பிரச்சாரம் ஒருபுறமிருக்க மூவரின் விளக்கம், அதுகுறித்த சபாநாயகரின் நடவடிக்கை என இனிவரும் நாட்களில் அரசியல் பரபரப்புகளுக்கு பஞ்சமிருக்காது.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon