மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 27 ஜன 2020

விசாரணைக்கு ஆஜரான தலைமை நீதிபதி!

விசாரணைக்கு ஆஜரான தலைமை நீதிபதி!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தன் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்கும் ஆணையத்தில் நேற்று (மே 1) ஆஜரானார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (64) மீது உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்த 35 வயதான முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து ஏப்ரல் 19ஆம் தேதி 22 நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இப்புகார் தொடர்பாக விசாரிக்க மூத்த நீதிபதி எஸ்.ஏ.போப்தே, பெண் நீதிபதிகள் இந்து மல்கோத்ரா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகிய மூவர் அடங்கிய in-house-panel விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் முதற்கட்ட விசாரணை ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினத்தில் தலைமை நீதிபதி மீது புகார் தெரிவித்த பெண் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால் விசாரணை ஆணையத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை; நீதி கிடைக்கும் என எனக்கு நம்பிக்கை இல்லை, எனவே இனிமேல் விசாரணை ஆணையத்தில் ஆஜராகப் போவதில்லை என புகார் அளித்த பெண் ஏப்ரல் 30ஆம் தேதி கூறியிருந்தார். இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று (மே 1) விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் தன் மீதான பாலியல் புகார் சம்மந்தமாக விசாரணை ஆணையத்தில் ஆஜராகியிருப்பது இதுவே முதல்முறை என்றும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத் தரப்பிலிருந்து, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “விசாரணைக்கு ஆஜராகுமாறு விசாரணை ஆணையத்திலிருந்து தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்” என்று கூறியுள்ளார். மூடப்பட்ட அறையில் நடந்த இவ்விசாரணையில் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு ரஞ்சன் கோகாய் பதிலளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon