மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 25 ஜன 2020

மசூத் அசார்: எதிர்க்கூட்டணியின் படிப்படியான வெற்றி!

மசூத் அசார்: எதிர்க்கூட்டணியின் படிப்படியான வெற்றி!

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் நேற்று (மே 1) ஐநா பாதுகாப்புக் குழுவில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இதற்கு முன்பு, அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு சீனா நான்கு முறை முட்டுக்கட்டை போட்டது. பின்னர் ஐநா பாதுகாப்பு குழு உறுப்பு நாடுகள் சீனாவின் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. தொடர் அழுத்தங்களுக்கு பின் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளது. இச்செய்தியை ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதின் உறுதிப்படுத்தியுள்ளார்.

தூதரக ரீதியாக இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் சீனா தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. அமெரிக்காவின் கடும் அழுத்தம், பிரான்ஸ், இங்கிலாந்தின் ஆதரவு என இந்தியாவுக்கு சாதகமாக திருப்பங்கள் ஏற்பட்டன. பிப்ரவரி 21ஆம் தேதியன்று புல்வாமா தாக்குதலை கண்டித்து ஐநா பாதுகாப்பு குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. பிறகு, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு ஐநா பாதுகாப்பு குழுவில் முன்மொழிந்தன. ஏற்கெனவே இதுபோல 2017ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டு தோல்வியுற்றன என்பது நினைவுகூரத்தக்கது.

இந்த முன்மொழிதலுக்கு கிடைத்த ஆதரவு இந்தியாவுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக இருந்தது. ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா என பல நாடுகள் ஆதரவளித்தன. ஆனால் சீனாவோ ஆறு மாதங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது. சீனாவின் நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாக இந்தியா தெரிவித்தது. மற்ற நாடுகள் சீனாவை கண்டித்தாலும், இந்தியா விமர்சிக்கவில்லை. மாறாக, சீனாவுடன் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது இந்தியா.

ஆறு மாதங்கள் பொறுத்திருக்காமல் மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டுமென்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வந்தது. மசூத் அசார் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு குழுவில் அமெரிக்கா தலைமையில் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இவ்விவகாரம் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு பொதுவாக்கெடுப்புக்கு வித்திடும். மேலும், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஏன் தடை போடப்படுகிறது என்பதற்கு சீனா விளக்கமளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

சர்வதேச அரங்கில் ஒரு பயங்கரவாதிக்கு ஆதரவாக சீனாவால் விளக்கமளிக்க முடியாது. மேலும், விவாதங்கள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்படும். இத்தகைய இக்கட்டான சூழலில் சீனாவை தள்ளுவதே அமெரிக்கா தலைமையிலான குழுவின் திட்டம். பொது விவாதத்தை தவிர்த்தாக வேண்டும் என்பதை சீனா அறியும். இந்தியாவும் சீனாவுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தது. இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலா சீனா, அமெரிக்கா, ரஷ்யா என தொடர் பயணங்களில் ஈடுபட்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் சீனம் சென்று அந்நாட்டின் பிரதமர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா, பாகிஸ்தான் என இருநாடுகளிடமிருந்தும் வரும் அழுத்தத்தால் மசூத் அசார் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள சீனா முடிவெடுத்துள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாதத்துக்கு ஆதரவாக சீனா செயல்படுவதாக பொது கருத்துகள் நிலவுவதை சீனம் அறியும். மசூத் அசார் விவகாரம் இந்த களங்கத்தை துடைக்க சீனாவுக்கு உதவலாம். மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டதன் விளைவாக அவரது சொத்துகள் முடக்கப்படுவதோடு, அவர் வெளிநாடுகளுக்கு பயணிக்கவும் தடை விதிக்கப்படும்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon