மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

திமுகவின் 40 எம்.எல்.ஏ.க்கள் அதிமுக வரத் தயார்: அமைச்சர்

திமுகவின் 40 எம்.எல்.ஏ.க்கள்  அதிமுக வரத் தயார்: அமைச்சர்

எடப்பாடி கண்ணசைத்தால் திமுக எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் அதிமுக வருவதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட மூன்று அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இதனைக் கண்டித்து சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது திமுக. இதன்மூலம் திமுக- தினகரன் நெருக்கம் வெளிப்பட்டுவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் மேலஅரசடி கிராமத்தில் நேற்று (மே 1) செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்றவர்கள் அதிமுகவின் கரைவேட்டியைக் கட்டிக்கொண்டே சுயேச்சையான தினகரனுக்கு ஆதரவாக வேலைபார்த்துள்ளனர். தினகரன் ஆரம்பித்த கட்சியில் பதவிவகிக்கிறார்கள். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கொறடா சபாநாயகரிடம் மனு அளித்ததைத் தொடர்ந்து சபாநாயகர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புகிறார். இது சபாநாயகரின் முடிவு. ஆனால் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கும் ஆதரவாக ஸ்டாலின் வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசுவது அரசியல் சந்தர்ப்பவாதம். ஸ்டாலின் புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, “ 40 திமுக எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கம் வருவதற்கு தயாராக உள்ளனர்” என்று குறிப்பிட்டவர், அவர்களுக்கு பணம் கூட கொடுக்க வேண்டாம். எடப்பாடி பழனிசாமியின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு திமுகவிலிருந்து வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். ஏனெனில் ஸ்டாலின் தலைமையை அங்கு யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுக மனதளவில் பிளவுற்று இருக்கிறது. ஸ்டாலினை தலைமையை ஏற்காத ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எடப்பாடி தலைமையை ஏற்று அதிமுக வரலாம் ” என்றும் தெரிவித்துள்ளார்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon