மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

அஜித் இயக்குநரின் படத்தில் ‘ஹீரோ’வாக ராதிகா

அஜித் இயக்குநரின் படத்தில் ‘ஹீரோ’வாக ராதிகா

காதல் மன்னன், அமர்க்களம் படங்களை இயக்கிய சரணின் அடுத்த படத்தில் ராதிகா பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (மே 1) வெளியாகியுள்ளது.

இயக்குநர் சரண் அஜித், கமல் போன்ற முன்னணி கதாநாயகர்களை இயக்கியவர். அஜித் நடித்த காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல், கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். அதன் பின் இவர் இயக்கிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெறாமல் போனது.

வினய் நடிப்பில் சரண் தயாரித்து, இயக்கிய ஆயிரத்தில் இருவர் படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது. போதிய வரவேற்பை அப்படம் பெறவில்லை. இந்த நிலையில் இரண்டு வருட இடைவெளிக்குப் பின் சுரபி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கத் தொடங்கினார்.

ராதிகா சரத்குமார் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சரணின் ஹிட் டைட்டிலான வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போலவே மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் ஆரவ், காவ்யா தாப்பர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஆகஸ்ட் மாதம் வெளியாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று(மே 1) வெளியானது. இதில் ராதிகா தாதாவாகவும் அவரிடம் பணிபுரியும் ரவுடியாக ஆரவ்வும் நடித்துள்ளனர். சைமன் கே கிங் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ராதிகா சுருட்டு பிடிப்பது போல இருக்கும் இப்போஸ்டருக்கு கலவையான விமர்சனங்களும் இணையத்தில் வந்து கொண்டிருக்கின்றன.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon