மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 27 ஜன 2020

இளைய நிலா: உங்கள் படத்தை வரைந்தது யார்?

இளைய நிலா: உங்கள் படத்தை வரைந்தது யார்?

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 48

ஆசிஃபா

சராசரி ஆயுட்காலம் 60 ஆண்டுகள் என்று வைத்துக்கொண்டால், நம் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பங்கு பிறருடைய conditioningஇல்தான் கழிகிறது. பெற்றோர், உறவினர், பெற்றோரின் நண்பர்கள் என்று பலரையும் சொல்லலாம். நாம் எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், என்ன அடிப்படையில் ஒரு உறவு ஏற்படுகிறது என்று அனேகமாக எல்லாவற்றையும் அவர்கள் கண்கள் வழியாகவே நாம் பார்க்கிறோம்.

உறவு என்றால், அது ரத்த சொந்தமாகவோ, நமக்கு உதவி செய்தவர்களாகவோ இருக்க வேண்டுமென்று பெற்றோர் நினைத்தால், பிள்ளைகளும் அதையே நினைப்பார்கள். சிலர் உறவில், உண்மை/நேர்மை முக்கியம் என்று கருதினால், வேறு சிலர் அன்பு முக்கியம் என்று சொல்வார்கள். இப்படிப் பிறரின் கருத்துக்களை, அவை சரியோ தவறோ, அப்படியே உள்வாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.

இவையனைத்தையும் தாண்டி, நமக்கென்ற ஒரு பார்வையை, ஒரு அடிப்படையையும் உருவாக்கிக்கொள்வதற்குச் சில காலம் தேவைப்படுகிறது. அந்தக் காலமும் வெளியும் எல்லோருக்கும் கிடைக்கிறதா என்பது மிக முக்கியமான விஷயம்.

அதைத் தாண்டி, நம்மை உருவாக்கிக்கொள்வதில் நாம் எவ்வளவு கவனம் செலுத்துகிறோம்? ‘நம்மைச் செதுக்கும் உளியே நாம்தான்’ போன்ற ஆகிவந்த மோட்டிவேஷன் வசனங்களைப் பேச நான் விரும்பவில்லை.

நம் கல்வி, வேலை என்பதைத் தாண்டி, நம்மை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம்? அப்படி ஒரு சுயத்தை நாம் நமக்காக உருவாக்கிக்கொள்கிறோமா? வேலைக்குச் செல்வதோ, படிப்பில் நல்ல ரேங்க் எடுப்பதோ மட்டுமே வாழ்க்கை இல்லை அல்லவா?

இப்படி ஒரு scenarioவைக் கற்பனை செய்து பாருங்களேன். திடீரென்று ஒருநாள், நம் கல்விச் சான்றிதழ்களுக்கு மதிப்பில்லை என்று சொல்கிறார்கள். வாங்கிய பட்டம் ஒன்றுமில்லாமல் போகிறது. எந்த ஒரு வேலைக்குமே தனி மதிப்பெல்லாம் இல்லை. எல்லாமே ஒன்றுதான். நான் ஐஏஎஸ், நான் டாக்டர், நான் பொறியியலாளர் என்றெல்லாம் சொல்வது வெற்று வார்த்தைகளாகின்றன.

இப்போது வந்து, நீ யார்? உனக்கு என்ன தெரியும்? என்று கேட்டால் என்ன சொல்வோம்?

நம்மில் பலரும் பதிலில்லாமல்தான் விழிப்போம். நாம் வளர்ந்த, வாழும் சூழ்நிலை அப்படித்தான் என்பதுதான் நிதர்சனம். இந்தச் சூழலைத் தாண்டித்தான் நமக்கான valuesஐ உருவாக்கிக்கொள்ள வேண்டும். நம் பெற்றோர் வேறு, நாம் வேறு; அவர்கள் வாழ்ந்த சூழ்நிலையும் நாம் வாழ்வதும் முற்றிலும் மாறுபட்டவை. உண்மையில், முன்னெப்போதையும்விட இப்போதுதான் இளைஞர்களுக்கான கொள்கைகள் அழுத்தமாகத் தேவைப்படுகின்றன.

இந்தக் கொள்கை (values) என்பது அன்பு, அறம், நேர்மை என்று காலம்காலமாக வருவதாகவும் இருக்கலாம், நமக்கு ஏற்றதுபோன்ற கொள்கைகளை உருவாக்கிக்கொள்ளவோ செய்யலாம். இவைதான் நம் வாழ்க்கைக்கான முழுமை உணர்வைக் கொடுக்கின்றன. பணமும் புகழும் தீக்குச்சி போலவே ஒரு நிமிடம் எரிந்து அடங்கிவிடுகின்றன.

அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்வில் நமக்கான தேவைகள் அதிகம். நம் சூழ்நிலை சிக்கலானது. அனைவருக்கும் சிந்திப்பதற்கான வாய்ப்பும் காலமும் வெளியும் கிடைப்பதில்லை. ஆனால், அனைத்திற்கும் மத்தியில் வாழ்வின் மிக முக்கியமான வேலைக்குச் சிறிது காலத்தை நாம் ஒதுக்க வேண்டும்.

ஏனென்றால், ஒரு கட்டத்தில் நாம் திரும்பிப் பார்க்கையில் நமக்குத் தெரியப்போவது நம் மதிப்பெண்களோ, பணமோ இல்லை; நாம் எப்படியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம் என்ற ஒரு ஓவியச் சட்டகமே தெரியும். அதை எந்த வண்ணங்களால் நிரப்பப் போகிறோம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும் இல்லையா?

அன்பே சுமையாகலாமா?

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon