மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 29 ஜன 2020

இடைத்தேர்தல்: அமமுகவினரை ஊட்டி வளர்க்கும் அதிமுகவினர்!

இடைத்தேர்தல்:  அமமுகவினரை ஊட்டி வளர்க்கும் அதிமுகவினர்!

நான்கு தொகுதி இடைத்தேர்தல் பல சுவாரஸ்யங்களை தேக்கி வைத்திருக்கிறது. அதிமுகவும், அமமுகவும் என்னதான் கடுமையான வார்த்தை மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டாலும், இடைத்தேர்தல் களத்தில் அமமுகவினரை ஊட்டி வளர்ப்பது அதிமுகவினர்தான்.

புரியவில்லையா?

சூலூர் இடைத்தேர்தலுக்காக அந்நகரமே திருவிழா கோலம் பூண்டிருக்கிறது. நகரத்தின் மையத்தில் திமுக, அதிமுக, அமமுக ஆகியவை திருமண மண்டபங்களைப் பிடித்து தங்கள் கட்சியின் தொண்டர்களுக்கு உணவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பரப்புரைக்கு சென்றுவிட்டு வந்து மதிய வேளையில் பசியோடு திரும்பும் அமமுக தொண்டர்கள் தங்கள் மண்டபத்துக்கு செல்வதற்கு நேரம் ஆகும் என்பதால், சாப்பிட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும் என்ற அவசரத்தில் அதிமுகவினரின் மண்டபத்துக்குள் நுழைகிறார்கள்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரையும் இன்னார்தான் என்று அடையாளப்படுத்த முடிவதில்லை. அதனால் அதிமுக கரை வேட்டிக்கொண்டு யார் வந்தாலும் அதிமுக மண்டபத்தில் சாப்பாடு போடப்படுகிறது. அதே வகையில் அமமுகவினரும் கறுப்பு சிகப்பு வெள்ளை கரைவேட்டிக் கட்டியிருப்பதால் எந்த வித நெருடலும் இன்றி அதிமுகவின் மண்டபங்களில் சென்று உணவு அருந்துகின்றனர்.

இதுபற்றி ஒரு அமமுக நிர்வாகியிடம் கேட்டோம். “என்ன சார்... 2016 தேர்தல்ல எல்லாரும் ஒண்ணாதான வேலை செஞ்சோம். இந்தத் தேர்தல் முடிஞ்சதும் நாங்க எல்லாரும் ஒண்ணாதான் ஆகப் போறோம். அதனால என்ன? ரெண்டு பேரும் ஒரே கரைவேட்டிதாங்குறதால பிரச்னை இல்லாம ஓடிக்கிட்டிருக்கு” என்று சிரித்தார்கள்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon