மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 25 ஜன 2020

5 ஆண்டுகளில் 942 குண்டுகள் வெடித்துள்ளன: ராகுல்

5 ஆண்டுகளில் 942 குண்டுகள் வெடித்துள்ளன: ராகுல்

பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 942 இடங்களில் முக்கியக் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி பகுதியில் கமாண்டோ படைவீரர்கள் சென்ற வாகனம் ஐஇடி ரக குண்டுகளால் நேற்று (மே 1) வெடிக்கச் செய்யப்பட்டது. இக்கொடூர சம்பவத்தில் 16 படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர். மாவோயிஸ்ட்டுகளால் நடத்தப்பட்ட இச்சம்பவத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்து இரங்கல்களும், கண்டனங்களும் வந்துள்ளன. குறிப்பாக, பிரதமர் மோடி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “2014ஆம் ஆண்டிலிருந்து புல்வாமா, பதன்கோட், உரி, கட்சிரோலி உள்ளிட்ட பல முக்கியக் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தமாக 942 முக்கியக் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. பிரதமர் மோடி இவற்றை காது கொடுத்து கேட்க வேண்டும். கவனிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். ஏப்ரல் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 5 ஆண்டுகளில் ஒரு இடங்களில் கூட முக்கியக் குண்டுவெடிப்புச் சம்பவமோ அல்லது பெரிய தீவிரவாதத் தாக்குதலோ இந்த நாட்டில் நடைபெறவில்லை என்று கூறியிருந்ததைக் குறிப்பிட்டு இதை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

இதனிடையே ஏப்ரல் 23ஆம் தேதியன்று மகாராஷ்டிர மாநிலம் ஷதோல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “பழங்குடி மக்களை போலீசாரை வைத்து சுடுவதற்கு நரேந்திர மோடி ஒரு புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளார். பழங்குடியினரை தாக்கலாம் என்று அச்சட்டம் கூறுகிறது. அவர்கள் உங்களது நிலங்களை பிடுங்கினார்கள், உங்களது காடுகளை பிடுங்கினார்கள், உங்களது நீரை எடுத்துக்கொண்டார்கள். தற்போது உங்களை சுட்டுக்கொல்லலாம் என்று கூறுகிறார்கள்” என்று பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் 48 மணி நேரத்திற்குள் பதிலளிக்கும்படி ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon