மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

மனநல மருத்துவம் தனியார்மயமாகிறதா?

மனநல மருத்துவம் தனியார்மயமாகிறதா?

சேது ராமலிங்கம்

தேர்தல் நடந்துவரும் வேளையில் அந்தப் பரபரப்பைப் பயன்படுத்திக்கொண்டு சத்தமில்லாமல் மனநல மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முன் தயாரிப்பாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தேர்தல் முடியும் வரை வெளியிட முடியாது என மறுத்துள்ளது தமிழக அரசு. அதையும் மீறிக் கசிந்துள்ள செய்திகளில், ஹான்ஸ் பவுண்டேஷன், பேனியன் என்ற தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழக அரசுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளனர் என்பது வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி அரசு மனநல மருத்துவமனையில் நீண்டகாலமாக தங்கி சிகிச்சை பெறும் மனநோயாளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஹாஃப்வே ஹோம்ஸ்

மனநல மருத்துவமனைகளில் பல ஆண்டுகளாகத் தங்கி குணமாகியிருந்தாலும், அல்லது ஆகாவிட்டாலும் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாமல் கைவிடப்பட்ட நோயாளிகள் இருப்பார்கள். இவர்களைச் சமூகத்துடன் இணைக்கும் பாலமாக வீட்டைப் போன்ற சூழலுடன் உள்ள ஹாஃப் வே இல்லங்களை (halfway homes) உருவாக்கி அவற்றில் தங்க வைத்து சிகிச்சை அளிப்பதுண்டு. வெளி நாடுகளில் இது போன்ற இல்லங்கள் அமைக்கக்கப்பட்டு மனநோயாளிகள் சமூகத்துடன் இணைய சிசிச்சை அளிக்கப்படுவதுண்டு. ஹாஃப் வே இல்லங்களை அமைத்து அரசு மனநல மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளைத் தனியார் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்க உள்ளனர்.

பிரச்சினை இங்கிருந்துதான் தொடங்குகிறது. தனியார் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது என்பது மனநல மருத்துவத் துறையையே தனியார்மயமாக்குவதற்கான முதல் நடவடிக்கை என மன நல மருத்துவர்களும் அந்தத் துறையிலுள்ள செயல்பாட்டாளர்களும் மனநலச் சமூகப் பணியாளர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

நோக்கம் என்ன?

ஓராண்டு காலம் வரை மனநோயாளிகள் இந்த ஹாஃப் வே மருத்துவமனைகளில் இருப்பார்கள் அதற்கு பின்னர் அவர்கள் தங்கியிருக்கும் காலம் நீட்டிக்கப்படும். அதற்கு மேல் அவர்கள் என்ன ஆவார்கள் என்ற தகவல் இல்லை. எதற்காகத் தனியார் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்போகின்றனர் என்பதும், அதன் நோக்கமும் தெரியவில்லை.

2017 டிசம்பரில் மக்களுக்கான மனநல மருத்துவர்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ஏற்கனவே இந்தியாவில் தேவைக்கேற்ப மனநல மருத்துவர்களோ முறையான சிகிச்சைக்கான கட்டமைப்போ நவீன சாதனங்களோ இல்லாத சூழலில் இப்பிரச்சினைக்கான தீர்வாக மனநலத் துறையைத் தனியார் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது தீர்வாகாது என்று கூறியிருந்தது.

கடுமையான பற்றாக்குறை

இந்தியாவில் தனியார் தொண்டு நிறுவனங்களிடம் அரசிடம் உள்ளது போன்ற கட்டமைப்பு வசதிகள் இல்லை அவர்களிடம் ஒப்படைக்கும் திட்டம் பல நாடுகளில் தோல்வியையே தழுவியுள்ளது. மனநல மருத்துவத் துறையைப் பொருத்தவரை மருத்துவர்கள் எண்ணிக்கை, மருத்துவமனைகள் ஆகியவற்றில் கடுமையான பற்றாக்குறையே நிலவுகிறது.

நாடு முழுவதும் 9,696 மனநல மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர் ஆனால் 2002இல் பொது சுகாதாரச் சேவைத் துறைகளின் இயக்குநரகம் மேற்கொண்ட சர்வேயின்படி 2219 மன நல மருத்துவர்கள்தான் உள்ளனர்.

கிளினிக்கல் சைக்காலாஜிஸ்ட்டுகள் எனப்படும் மருத்துவமனை சார்ந்த உளவியலாளர்கள் 13,259 பேர் தேவைப்படுகின்றனர் இருப்பதோ வெறும் 343 பேர்தான்.

மனநல சமூகப் பணியாளர்கள் 19,064 பேர் தேவைப்படுகின்றனர் இருப்பவர்களோ வெறும் 290 பேர்தான்.

4000 பேர் மனநோய் சிகிச்சையில் பயிற்சிபெற்ற செவிலியர்கள் தேவைப்படுகின்றனர் ஆனால் அவர்கள் 100க்கும் குறைவாகவே உள்ளனர். இந்தத் துறைக்கு அவர்கள் வருவதே மிகக் குறைவாக உள்ளது. இந்த எண்ணிக்கை இரு மடங்காக கடந்த காலத்தில் அதிகரித்திருந்தாலும் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற இயலாதவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனியாருக்கு தாரை வார்ப்பு பின்னணி

நாடு முழுவதும் உள்ள 43 அரசு மனநல மருத்துவமனைகளில் 21000 படுக்கைகள் உள்நோயாளிகளுக்காக உள்ளன ஆனால் தனியாரிடமோ 5100தான் உள்ளன. இந்நிலையில்தான் அரசு கட்டமைப்பை பலப்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு தனியாருக்கு அனுமதி அளித்து மனநலத் துறையைத் தனியாரிடம் தாரை வார்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. இது ஒரு வகையில் மனநோயாளிகளையும் அவுட் சோர்சிங் செய்வதாகும். நீண்ட கால மனநோயாளிகளை வைத்து பல அரசு மனநலக் காப்பகங்களிலும் சில தனியார் மருத்துவமனைகளிலும் மெழுகுவர்த்திகள், திருநீறு, உறைகள், பொம்மைகள் உள்ளிட்ட பல சிறிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சிறு குறு தொழிற்சாலைகள் போன்று இயங்கும் இத்தொழிற்சாலைகளில் தயாராகும் இப்பொருட்கள் தரமானதாக இருப்பதால் பல பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்குகின்றன. எனவே தனியார்மயமாக்கும் திட்டத்தில் மனநோயாளிகளுக்கு மிகக்குறைவான கூலியை அளித்து அவர்களைச் சுரண்டும் நோக்கமும் இருக்கக்கூடும் என்பதை மறுப்பதிற்கில்லை.

வறுமைக்குத் தள்ளும் மருத்துவச் செலவு

உலக வர்த்தக அமைப்பிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மருத்துவத் துறையை முழுமையாகத் தனியார்மயமாக்குவதை நோக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. அரசு சுகாதாரத்திற்குச் செலவழிப்பது நாட்டின் சராசரி உற்பத்தியில் 1 விழுக்காட்டிற்கும் குறைவாகும். ஆனால், அந்த முதலீடுகளும் செலவும் மருத்துவக் கட்டணம், மருந்துகள், மருத்துவப் பரிசோதனைகளின் கட்டணத்தை அதிகமாக உயர்த்தி நோயாளிகளிடமிருந்தே உறிஞ்சி எடுக்கப்படுகின்றன. இதற்கான மிகப்பெரிய சந்தையும் உள்ளது. அதிகரித்துவரும் மருத்துவச் செலவினால் பல குடும்பங்கள் வறுமைக்குத் தள்ளப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். தனியார் துறையினர் மருத்துவத்துறையில் பெருமளவில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

2004இல் மேற்கொள்ளப்பட்ட தேசிய மாதிரி சர்வேயின்படி நாட்டின் நகரங்களிலுள்ள மருத்துவத் துறையில் தனியார் துறையினரின் சந்தைப் பங்கு 40 விழுக்காட்டிலிருந்து 62 விழுக்காடு வரையிலும் கிராமங்களில் 40 விழுக்காட்டிலிருந்து 59 வரையிலும் அதிகரித்துள்ளது. மருத்துவத் துறையிலுள்ள துப்புரவுப் பணிகள், கழிவு மேலாண்மை, ஆம்புலன்ஸ் சேவைகள் உள்ளிட்ட பல துறைகள் தனியாருக்குத் தனித்தனியாகப் பிரித்து அளிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மருந்துக் கம்பெனிகள், மருத்துவக் கருவிகள் தயாரிப்பிலும் அவை ஆதிக்கம் செலுத்திவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் நலம் கைவிடப்பட்டது

1978இல் (அல்மா ஆட்டா) அனைவருக்கும் நலம் என்ற கொள்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. அந்தக் கொள்கையானது, உலக வர்த்தக அமைப்பிடம் செய்துகொண்ட சேவைகளுக்கான (காட்) ஒப்பந்தத்தின்படி மருத்துவச் சேவைகளையும் வணிகமயமாக்குவது, தனியார்மயமாக்குவது என்பதற்காகப் படிப்படியாகக் கைவிடப்பட்டது. 1993இல் தேசிய அளவில் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு உலக வங்கியிடம்நிதி பெறுவதாக மாறியது. அதன்படி முழுமையான மருத்துவச் சேவைகள் என்பது மாற்றப்பட்டு பேக்கேஜ் முறையில் தனித்தனியாக நோய்களுக்கேற்ப சேவைகள் மாற்றப்பட்டன. 12ஆம் ஐந்தாண்டு திட்டத்திலும் (2012-17) அனைவருக்குமான சுகாதாரத் திட்டத்தை முடிவு செய்யும் திட்டக் கமிஷனின் உயர் மட்ட நிபுணர் குழுவிலும் அனைவருக்குமான நலம் என்ற கொள்கை மாற்றப்பட்டது. அதாவது வரிகளை அதிகரிப்பதன் மூலமாக நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை ஆகியவற்றை முழுமையாக மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

வாழ்வா சாவா பிரச்சினை

மருத்துவத் துறையிலுள்ள பிரச்சினை அடிப்படையில் சந்தைப் பொருளாதார விதிகளைவிட தீவிரமானது. மருத்துவத் துறையின் சேவைகள் தேவை, அளிப்பு என்ற விதிகளின்படி நடப்பதில்லை. மருத்துவத் துறை சேவைகளை பெறுவோருக்கு இந்த வாய்ப்பு கிட்டுவதில்லை அவர்கள் தேவையில்லை எனினும் வாங்கியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மருத்துவத் துறை சேவைகள் நோயாளிகளை அல்லது நுகர்வோர்களை வாழ்வா சாவா என்ற நிலைக்கு அச்சுறுத்துவதால் அவர்கள் வாங்கியே ஆக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். மருத்துவத் துறை சந்தையிலுள்ள இந்த உளவியலைப் புரிந்துகொண்டே கார்ப்பரேட்டுகள் உள்ளே புகுந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

நோயை உருவாக்குபவர்களே சிகிச்சை அளிப்பதா?

தற்போது மனநல மருத்துவம் என்பது தனியாரின் ஆதிக்கத்திற்கு மாற உள்ளது. மனநோய்களுக்கு காரணமான சமூக அமைப்பை உருவாக்கும் சக்திகளுக்கே மனநல மருத்துவ சிகிச்சை அளிக்கும் வாய்ப்பும் கிடைக்க உள்ளது. இந்தப் போக்கில் மனநோயாளிகள் என்ன ஆவார்கள் என்பது குறித்து இந்த கம்பெனிகளுக்கோ அல்லது தனியார் தொண்டு நிறுவனங்களுக்கோ அக்கறை இல்லை. அவர்களைப் பொறுத்தவரை லாபம்தான் இலக்கு.

மனநோய்களுக்குக் காரணமான சமூக அமைப்பை யார் உருவாக்குகிறார்கள் என்பதை நாளை காண்போம்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon