மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 27 ஜன 2020

திருச்செந்தூர்: அறநிலையத் துறையினர் மீது வழக்குப் பதிவு!

திருச்செந்தூர்: அறநிலையத் துறையினர் மீது வழக்குப் பதிவு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் அறநிலையத் துறை இணை ஆணையர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளர் போலீசார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள மூலவர் சிலை முன்பாக இந்திர, தேவ மயில்களின் சிலைகள் உள்ளன. இக்கோயிலில் நடந்த பராமரிப்புப்பணியின்போது தேவ மயில் சிலை சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதன்பின்னர் கோயிலின் சுற்றுப்பிரகார சுவர் இடிந்து ஒருவர் பலியானார். உடைந்த சிலையினால் அபசகுனம் ஏற்பட்டதாகக் கூறி, அதனை மாற்றும் முயற்சிகள் இந்து சமய அறநிலையத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டன.

2017ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதியன்று அர்த்தசாம பூஜைக்குப் பிறகு இரவோடு இரவாக மயில் சிலை மாற்றப்பட்டு புதிய சிலை வைக்கப்பட்டது. திருச்செந்தூர் கோயிலில் உள்ள அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்சோதி இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. இது தொடர்பாக ரெங்கராஜன் என்பவர் அறநிலையத் துறை ஆணையர் ஜெயாவுக்குப் புகார் ஒன்றை அனுப்பினார். இதன்பின்னர் 15 நாட்கள் கழித்து, மீண்டும் பழைய மயில் சிலை அதே இடத்தில் வைக்கப்பட்டது.

துண்டிக்கப்பட்ட சிசிடிவி

புதிய சிலையை வைத்தபோதும், அதன்பின்னர் பழைய சிலையை மாற்றிய போதும் அந்த இடத்தில் இருந்த சிசிடிவி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மயில் சிலையைச் சுற்றி கம்பிக்கூண்டு இருப்பதால் அது சேதமடைய வாய்ப்பில்லை எனவும், சிலையை மாற்ற முயற்சித்தபோதே தேவ மயில் சிலையில் சேதம் ஏற்பட்டது எனவும் ஒருசாரார் புகார் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேலுவிடம், திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் பாரதி என்பவர் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில், மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் இணை ஆணையர் பரஞ்சோதி, கண்காணிப்பாளர் பத்மநாபன், திருமேனி காவல் பணியாளர்கள் சுரேஷ், ராஜகுமார், சுவாமிநாதன் உட்பட 5 பேர் மீது திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் அறிவுறுத்தலின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon