மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 20 ஜன 2020

கிராம சபைக் கூட்டம் நடக்காதது ஏன்?

கிராம சபைக் கூட்டம் நடக்காதது ஏன்?

தமிழகம் முழுவதும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நேற்று வழக்கமாக நடைபெறும் கிராம சபைக் கூட்டம் நடைபெறாததன் காரணம் வெளியாகியுள்ளது.

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம், மே 1 உழைப்பாளர்கள் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என வருடத்தில் நான்கு நாட்கள் நடைபெறுவது வழக்கம். ஊராட்சி மன்றத் தலைவரால் கூட்டப்படும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொதுமக்கள், அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள் குறித்த தங்களது குறைகளைத் தெரிவிப்பர். ஊராட்சி மன்றத் தலைவர், அதுகுறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளைக் குறிப்பிட்டுக் கூறுவார் அல்லது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிப்பார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில், தனி அதிகாரிகள் மூலமாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நேற்று வழக்கமாக நடக்க வேண்டிய கிராம சபைக் கூட்டம் நடைபெறவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் கூட்டம் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில், “தமிழக பாராளுமன்றத் தேர்தல் 2019 மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலக தொலைபேசி தகவலின்படி மே 1ஆம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபைக் கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுபோலவே ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon