மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

தற்காலிக செவிலியர்களுக்கு அனுமதி: உத்தரவு!

தற்காலிக செவிலியர்களுக்கு அனுமதி: உத்தரவு!

தேவையில்லாத நிர்வாக நெருக்கடியைத் தவிர்க்க, மருத்துவ தேர்வு வாரிய விதிகளின்படி அவ்வப்போதைக்கு அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு தமிழகத்தில் 7,243 செவிலியர் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் கலந்து கொண்டவர்களில் 498 பேரை 2016ஆம் ஆண்டும், 950 பேரை 2017ஆம் ஆண்டும் நியமனம் செய்துள்ளது அரசு என்று கூறி, சென்னையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், இவர்களை நியமிக்க மருத்துவ தேர்வு வாரிய விதிகளில் விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் அவசரநிலை கருதி இவர்கள் நியமிக்கப்பட்டதாகவும், இவர்களின் பணி வரன்முறை செய்யப்படவில்லை என்று அரசுத் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று (மே 1) இந்த வழக்கை விசாரணை செய்தது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு. அப்போது, தேவையில்லாத நிர்வாக நெருக்கடியைத் தவிர்க்க மருத்துவ தேர்வு வாரிய விதிகளின்படி, அவ்வப்போதைக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

“தேர்வு விதிகளை மதிக்காமல் விதிகளில் விலக்கு அளித்தது மிகப்பெரிய தவறு. விதிகளைப் பின்பற்றியே தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் விதிகளில் விலக்கு அளிக்கலாம். ஆனால், அதை வழக்கமான நடைமுறையாகப் பின்பற்றக் கூடாது” என்று நீதிபதி அறிவுறுத்தினார்.

இதுபோல சட்டவிரோதமான நியமனங்களை தொடர அனுமதிக்க முடியாது எனக் கூறிய நீதிபதி, 2015ஆம் ஆண்டு தேர்வில் கலந்து கொண்டவர்களின் பணியை வரன்முறை செய்யக் கூடாது எனவும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இவர்களைப் புதிதாக மேற்கொள்ளும் தேர்வு நடைமுறைகளில் பங்கேற்க அனுமதிக்கலாம் எனவும், புதிய தேர்வு நடைமுறை முடியும் வரை இந்த ஒப்பந்தப் பணியாளர்கள் பணியில் தொடர அனுமதிக்கலாம் எனவும், தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon