மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 29 ஜன 2020

தென்மாவட்ட ரிசல்ட்: அதிர்ச்சியில் எடப்பாடி

தென்மாவட்ட ரிசல்ட்: அதிர்ச்சியில் எடப்பாடி

தேர்தலுக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் சென்றபடியே இருக்கின்றன.

நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது உளவுத் துறை அதிகாரிகள் என்னிடம் தொடர்புகொள்வதில்லை’ என்று தெரிவித்தார் முதல்வர். ஆனபோதும் உளவுத் துறையிலிருந்து முக்கிய தகவல்கள் ஆளுங்கட்சிக்குச் செல்வது தவிர்க்க முடியாதது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

உளவுத் துறை மட்டுமல்ல, பல்வேறு நிறுவனங்களின் எக்சிட் போல் முடிவுகள், தம்பிதுரையின் ஏற்பாட்டில் மும்பை நிறுவனம் மூலம் நடத்திய எக்சிட் போல் முடிவுகள் என்று முதல்வரின் கவனத்துக்குப் பலவும் சென்றுள்ளன.

தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே செலவுக்குக் கொடுக்கப்பட்ட பணம் முறையாக மக்களுக்குச் சென்று சேரவில்லை என்ற தகவல் கிடைக்க, அது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய கணக்கு வழக்குகளைக் கேட்டிருக்கிறது அதிமுக தலைமை.

இந்த நிலையில்தான் கடந்த வாரம் முதல்வரின் முழு கவனமும் தென்மாவட்டத்தில் அதிமுக எப்படி இருக்கும் என்ற விஷயத்திலேயே இருந்திருக்கிறது. கொங்கு பகுதியில் முதல்வரின் நம்பிக்கைக்குரியவர்களாக வேலுமணியும், தங்கமணியும் இருக்கிறார்கள். ஆனால், தென்மாவட்டத்தில் தனக்கு அப்படி யாரும் இல்லை என்று கருதுகிறார் முதல்வர். இன்னும் சொல்ல வேண்டுமானால் தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் பரவலாக இருக்கும் நிலையில் தினகரனின் செல்வாக்கு அங்கே அடர்த்தியாக இருக்கிறது என்பது முதல்வருக்கு முன்னரே சொல்லப்பட்ட தகவல். அதனால்தான் தென்மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் மூன்றில் மட்டுமே போட்டியிட்டது அதிமுக.

இதுபற்றி கடந்த மார்ச் 31ஆம் தேதியே மின்னம்பலத்தில், தென்மாவட்டங்களை அதிமுக தவிர்த்தது ஏன்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதாவது தென்மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 10 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் மதுரை, தேனி, திருநெல்வேலி ஆகிய மூன்றில் மட்டுமே அதிமுக நின்றது. மற்ற தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டது. தென்காசியில் புதிய தமிழகமும், விருதுநகர் தொகுதியில் தேமுதிகவும், திண்டுக்கல்லில் பாமகவும், மீதமுள்ள சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் பாஜகவும் போட்டியிட்டன.

இந்த நிலையில்தான் தேனி, மதுரை ஆகிய இரு தொகுதிகளைக் குறிப்பாகக் கேட்டு தெரிந்துகொள்ள விரும்பியுள்ளார் முதல்வர். அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தேனி, மதுரை ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு எதிராக திமுக நிற்கவில்லை. திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸும், கம்யூனிஸ்டு கட்சிகளும்தான் அதிமுகவை எதிர்த்து நிற்கின்றன. திருநெல்வேலியில் அதிமுகவை எதிர்த்து திமுக நிற்கிறது. அதனால் தேனி, மதுரை நிலவரத்தைத் தெரிந்துகொண்டே ஒட்டுமொத்த தென்மாவட்டத்தின் நிலவரத்தை அறிந்துகொண்டதுபோல்தான் என்று கணக்குப் போட்டார் எடப்பாடி.

இந்த நிலையில் மதுரை, தேனி தொகுதிகள் பற்றி முதல்வருக்குச் சென்ற லேட்டஸ்ட் ரிப்போர்ட் அவருக்கு அதிர்ச்சியையே அளித்திருக்கிறது.

தேனியில் அதிமுக வேட்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்காகப் பணம் அள்ளி இறைக்கப்பட்டது. அதற்கு அடுத்த இடத்தில் தங்க தமிழ்ச்செல்வன் செலவு செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காகப் பெரிதாகச் செலவு செய்யவில்லை என்றாலும் சத்தமில்லாமல் மொழி சிறுபான்மையினர் வாக்குகளை முறையாக அணுகியிருக்கிறார் .

அதேபோல மதுரையிலும் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை ஆகியோர் தாராளமாகச் செலவு செய்தார்கள். மதுரையில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் களம் கண்டார். கம்யூனிஸ்டு தோழர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைப் பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால், திமுகவினர் சிற்சில பகுதிகளில் மட்டும் ஓட்டுக்கு 100 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.

மதுரையில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின் மனைவி கமலா, சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் மதுரையில் கணிசமாக வாழக்கூடிய அந்தச் சமுதாய முக்கியப் பிரமுகர்களிடம் பேசி சௌராஷ்டிர சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்கு உத்தரவாதம் செய்தார்.

இவ்வளவு விவரங்களையும் குறிப்பிட்டுள்ள அந்த உளவுத் துறையின் ரிப்போர்ட்டில் தேனி, மதுரை ஆகிய தொகுதிகளின் எக்சிட் போல் விவரங்களும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பில் தேனி, மதுரை தொகுதிகளில் அதிமுக பின் வாங்கியிருக்கிறது, திமுக முன்னிலை பெறுகிறது என்பதுதான் முதல்வருக்குப் போன ரிப்போர்ட்டின் சாரம்.

அதிமுகவின் பலம் வாய்ந்த தொகுதிகளில் திமுகவின் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் நிலையிலேயே இதுதான் நிலவரம் என்றால் மற்ற தொகுதிகளில் எப்படி இருக்குமோ என்று உதட்டைப் பிதுக்கிக்கொண்டே சில அமைச்சர்களிடம் கேட்டிருக்கிறார் முதல்வர்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon