மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 அக் 2019

ஆயுள் முழுவதும் அதிமுகதான்: ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்!

ஆயுள் முழுவதும் அதிமுகதான்: ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்!

ஆயுள் முழுவதும் அதிமுகவில் தான் இருக்கப்போவதாகவும், தன் உயிர்போகும் நாளில்கூட அதிமுக கொடிதான் தன் மேல் போர்த்தப்படும் என்றும் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி பிரதமர் மோடி தனது காசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதற்கு முதல் நாள் 25ஆம் தேதி காசி வீதிகளில் பேரணி சென்றார். இதை ஒட்டி தனது மனைவி, மகனுடன் காசி சென்ற ஓ.பன்னீர்செல்வம் அங்கே மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று சென்னை திரும்பினார். மோடி வேட்பு மனு செய்த அன்று அதிமுக சார்பில் தம்பிதுரை, வேலுமணி, வேணுகோபால் ஆகியோரும் ஓ.பன்னீருடன் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் காசி சென்ற ஓ.பன்னீர், அதிமுகவில் தனக்கு உரிய முக்கியத்துவம் இல்லாததால் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன. இன்னொருபக்கம் அமமுகவின் தேனி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், ‘ஓ.பன்னீர் குடும்பத்துடன் பாஜகவில் இணைவார்’ என்று தொடர்ந்து கூறினார். ஏப்ரல் 29ஆம் தேதி திருமங்கலத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம், ‘என்னைப் பற்றி வரும் செய்திகள் அடிமுட்டாள்தனமானவை’ என்று மறுத்தார். ஆனால், அதன் பின்னும் சில ஊடகங்களில் பாஜகவுக்குப் போகிறார் பன்னீர் என்று தகவல்கள் வெளியிடப்பட்டன. இதுபற்றி மின்னம்பலத்தில், ‘பாஜகவில் இணைகிறார்’: பன்னீருக்கு எதிராக அதிமுகவில் சதி? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில்தான் நேற்று (மே 1) இரவு ஓ.பன்னீர்செல்வம் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

“பெரியகுளம் நகராட்சித் தலைவர், வருவாய்த் துறை அமைச்சர், நிதியமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர்... இவை யாவற்றுக்கும் மேலாக தெய்வத் தாயாம் ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் பதவியில் மூன்று முறை, கட்சியின் பொருளாளராக 12 ஆண்டுகளுக்கும் மேல் பதவி, இன்று எம்.ஜிஆர். உருவாக்கிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என்று நான் கனவிலும் எதிர்பார்த்திராத உயரங்களைத் தந்த அதிமுகவை விட்டு நான் பாஜகவுக்குச் செல்லப் போகிறேன் என்று அடுக்காத புரளியை அவதூறாகப் பரப்பி வருகின்றன உள் நோக்கம் படைத்த சில ஊடகங்கள்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

மேலும், “அரசியலில் எதிர்நிலைகள் கொண்டபோதும் மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்டார் ஜெயலலிதா. மேலும், பாஜக மாநிலங்களவையில் நெருக்கடியான நிலையில் இருந்தபோதும், தனது வலுவான ஆதரவால் பாஜகவின் ஏராளமான தீர்மானங்களை நிறைவேற்றிக் கொடுத்தவர் ஜெயலலிதா. அதுபோல் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு வந்து முதல் வரிசையில் அமர்ந்து வாழ்த்தியவர் மோடி” என்று குறிப்பிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு தன் தலைவியை மதித்த தலைவர்களை ஜெயலலிதா வழியிலேயே மதிப்பதுதான் அதிமுகவின் அரசியல் எதிர்காலத்துக்கு உகந்த முடிவாகும் என்று கூறி தான் காசி சென்றதை நியாயப்படுத்தியுள்ளார்.

மேலும், “அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி எட்ட இருக்கும் மாபெரும் வெற்றியை நினைத்து குலைநடுக்கம்கொள்ளும் குள்ள நரிகள் என் மீது வதந்திகளைப் பரப்பி என்னையும் என் அரசியல் வாழ்க்கையையும் காயப்படுத்த அலைவதை நினைத்து வேதனை கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

“தமிழ்நாடு முதல்வர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியோடு இணைகரம் கொண்டு இந்த இயக்கத்தை இமையாகக் காப்பதற்கும் இந்திய அரசியலை இரு இலை இயக்கம்தான் தீர்மானிக்கும் என்ற பொற்காலத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கும் என் ஆயுள் முழுவதையும் அதிமுகவுக்காக ஒப்படைத்துத் தொண்டாற்றும் ஊழியன் நான். உயிர் போகும் நாளில்கூட அதிமுகவின் கொடி போர்த்துவதையே பெருமையாகவும், இலட்சியாகவும் கொண்டு வாழும் இந்த எளியவனை கட்சி மாறப் போகிறேன் என்றெல்லாம் வடிகட்டிய பொய்யை வதந்தியாக்கும் ஊடகங்களை நினைத்து வேதனை கொள்கிறேன்.

ஒருவரின் உழைப்பை, பெருமையை, கண்ணியத்தைப் பொய்யான எழுத்துகளால் கறைபடுத்திவிடலாம் என்று திட்டமிடுபவர்களுக்கு மக்கள் சக்தியும், இறைசக்தியும் உரிய கூலி கொடுக்கும். என் மீது பரப்பப்படும் அவதூறுகளைக் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள்” என்று முடித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

அதிமுக என்ற மிகப்பெரிய கட்சியின் இன்றைய தலைவராக (ஒருங்கிணைப்பாளராக) இருப்பவரே, தான் இந்தக் கட்சியிலிருந்து மாறி வேறு கட்சிக்கு செல்ல மாட்டேன் என்று அறிக்கை விடும் சூழலுக்கு ஆளாகும் நிலை அதிமுக வரலாற்றில் இதுவரை நடந்ததில்லை.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon