மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 20 ஜன 2020

டாப் ஸ்லிப் 7: புதுமைப்பித்தனின் காவிய நாயகன்!

டாப் ஸ்லிப் 7: புதுமைப்பித்தனின் காவிய நாயகன்!

எஸ்.எஸ்.மணி

மும்பை பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு நான் கடிதம் அனுப்பிய மறு நாளே 1954ஆம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியான ஒரு செய்தியை நகலெடுத்து எனக்கு அனுப்பினார்கள்.

நான் அனுப்பிய புகைப்படங்களிலிருந்த வுட்டின் பிறந்த தேதி, மறைந்த தேதியைக் கொண்டு இந்தியாவில் பிறந்த, வசித்த ஆங்கிலேயர்களில் பட்டியலிலிருந்து வுட்டின் பிறப்பு, இறப்புப் பதிவுகளை நகலெடுத்து அடுத்த ஒரே வாரத்தில் எனக்கு அனுப்பி வைத்தனர்.

மும்பையில் உள்ள கிறிஸ்து சர்ஸ்ட் தேவாலயத்தில் உள்ள பதிவேட்டில், தாமஸ் வில்லியம்ஸ், எலிசபெத் லூயிசிய என்ற இணையருக்குப் பிறந்த குழந்தையின் பெயர் அன்றோ பிரான்சியஸ் ஹ்யூகோ எனப் பதிவாகியுள்ளது. அவருடைய குடும்பப் பெயர் வுட்.

பணி ஓய்வுபெற்ற நிலையில் ஹ்யூகோ வுட் 24.10.1933 அன்று, மெட்ராஸ் ரீஜென்சி முதன்மை வனப் பாதுகாவலருக்கு எழுதியுள்ள சாசனத்தில் (Will), தனது உடலை “ஆனைமலையிலுள்ள மவுன்ட் ஸ்டூவர்ட் இல்லத்துக்கு அருகில் புதைக்க வேண்டும்” என எழுதியுள்ளார்.

12.12.1933 அன்று, கணைய பாதிப்பால் (Cirrhosis of Liver) வுட் 63ஆவது வயதில் குன்னூரில் மரணமடைந்துள்ளார்.

அவரது விருப்பத்தின் பேரில், கிறிஸ்துவ மதபோதகர் எஸ்.பி.ஸ்டீபன், சாப்ளின் ஆப் கோயம்புத்தூர் என்பவரின் மேற்பார்வையில் ஆனைமலையில் உள்ள மவுன்ட் ஸ்டூவர்ட் இல்லத்தின் அருகில் வுட்டின் உடலடக்கம் செய்யப்பட்டதாக அறிய முடிந்தது.

புதுமைப்பித்தன் தரும் பதிவு

இந்தப் பதிவுகள் எனக்குக் கிடைத்த சில மாதங்களுக்குப் பிறகு, என் வீட்டிலிருந்த புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுதியில் 28.9.1934ஆம் ஆண்டு வெளியான ஊழியன் என்ற இதழில் புதுமைப்பித்தன் எழுதிய தேக்கங்கன்றுகள் என்ற சிறுகதையைப் படிக்க நேர்ந்தது. அந்தக் கதையின் நாயகனாக வரும் வில்லி ஸ்டேதம் வேறு யாருமல்ல. நம்முடைய ஹ்யூகோ வுட்தான்!

கதையில் வரும் வில்லி ஸ்டேதம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தும், இம்பீரியல் பாரஸ்ட் சர்வீசில் இரண்டு ஆண்டுகள் இந்திய வனப்பணி அலுவலராகப் பயிற்சி பெற்ற பின் இந்தியா திரும்பும் நேரத்தில், லண்டனில் தட்டச்சராக இருந்த லில்லி கார்டார் என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.

இந்தியாவுக்கு வந்த வில்லி ஸ்டேதம் அஜ்மீர் காடுகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளார். அடுத்த ஆறாவது மாதத்திலேயே அவருக்கு டி.எஃப்.ஓ பதவி உயர்வும் தென்னிந்தியாவுக்குப் பணி மாறுதலும் கிடைத்தன.

மலேரியா காய்ச்சல், காச நோய்த் தொற்றுக்கள் நிரம்பியிருந்த ஆனைமலை காடுகளுக்கு அவர் வேலைக்கு வந்தார்.

உலாந்தி ரேஞ்ச், மலேரியா, யானை, தேக்கு மரம், இத்யாதிப் பொருள்கள் அபரிமிதமாகக் கிடைக்கும் ஸ்தலம் என்பது காட்டு இலாக்கா மான்யுவலின் கொள்கை. மலேரியாவுக்கு மட்டும் பணம் கொடுத்து வாங்க வேண்டாம். போக்குவதற்குத்தான் அதன் உதவி தேவை.

என்று தனக்கே உரிய நடையில் புதுமைப்பித்தன் அந்தக் காட்டுச் சூழலை விவரிக்கிறார்.

பெட்ரோல் வசமில்லாத மலைப்பகுதியில் பத்து கிலோமீட்டர் தொலைவிலேயே அவருடைய மோட்டார் வண்டிக்கு ஒரு கூரைக் கொட்டகை அமைத்து நிறுத்திக்கொண்டார். அங்கிருந்து தனது வளர்ப்பு நாயுடன், குதிரை மீதேறி உலாந்தி பள்ளத்தாக்குக்கு வந்து, அங்கிருந்த சிறிய வீட்டில் வாசித்துக்கொண்டே, தினமும் காலையில் குதிரை மீதேறிக் காடுகளுக்குள் செல்லும் ஸ்டேதம் மாலை நேரம்தான் திரும்புவார்.

அப்பையா என்ற ஒரு ரேஞ்சரையும் அவருடன் பணியாற்றிய சில கார்டுகளையும் பார்த்து அவர்களுக்கான வேலைகளை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்புவார்.

அவர் வீட்டுக்கு அருகிலேயே இவருடைய சமையற்காரன் ஒருவன் வசித்துவந்தான். அவர் வளர்த்துவந்த குதிரைகளைக் கட்டும் லாயம் வீட்டுக்கு அருகில் இருந்துள்ளது. இதைத் தவிர அந்தப் பகுதியில் எந்த வீடும் இல்லை.

சமையற்காரர் கொண்டு வந்து வைக்கும் உணவை மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் உண்ட பின், வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு செண்பக மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு நூல்களைப் படிப்பதும், தன் காதலிக்குக் கடிதங்கள் எழுதுவதுமாக, தன் காதலியின் நினைவுகளுடனே இரண்டு ஆண்டுகள் வாழ்ந்துள்ளார் ஸ்டேதம்.

இந்த நேரத்தில், காடுகளில் கவனிப்பார் இல்லாமல் குவிந்து கிடந்த மரங்களை எல்லாம் சுத்தம் செய்து கொண்டுவந்து ஓரிடத்தில் சேர்த்து, அதை வெளியூருக்குக் கொண்டுபோய் சேர்த்துள்ளார். புதர் மண்டியிருந்த காடுகளை எல்லாம் சீர்செய்துள்ளார். மரங்கள் இல்லாமல் இருந்த இடங்களில் எல்லாம் தேக்கு மரங்களை நடவு செய்துள்ளார்.

ஒருநாள் இரவு காட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய ஸ்டேதமுக்கு ஒரு கேபிள் (Cable - பின்னாளில் இது தந்தி) வருகிறது.

அதில்,

மிஸ்.லில்லி கார்ட்டர் நேற்று சாயங்காலம், பிக்காடில்லி மூலையில் மோட்டாரால் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரப்பட்டு, இன்று காலை உயிர் துறந்தாள். அவள் வேண்டுகோளின்படி தங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எங்கள் மனமார்ந்த அனுதாபம். - டாக்டர் பர்ன்!

என்று எழுதப்பட்டிருந்தது.

ஸ்டேதம் கண் கலங்கினார். என் காதலி சாலை விபத்தில் இறந்துவிட்டாளா? தன்னுடைய உணர்வுகளைக்கூடப் பகிர்ந்துகொள்ள ஆளில்லாத அந்தக் காட்டினுள் தனிமையில் அழுதார். மனமுடைந்த நிலையிலேயே சில நாட்கள் இருந்துள்ளார்.

பிறகு வழக்கம் போலவே காடுகளுக்குள் சென்றார், பகலெல்லாம் காடுகளில் மரங்களை நடவு செய்துவந்த ஸ்டேதம், இரவு நேரங்களில் மது பாட்டில்களைக் காலி செய்துவிட்டு, தனது வீட்டுக்கு முன்பிருந்த செண்பக மரத்தடியில் காதலி லில்லியுடன் தான் வாழ்வதாகக் கற்பனை செய்துகொண்டே வாழ்ந்துள்ளார்.

தனது காதலியின் நினைவாக அந்த மலைப்பகுதி முழுவதும் தேக்கங்கன்றுகளை நட்டுக்கொண்டிருந்தார். அங்கே நடப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் லில்லி, குவண்டலின், ஆலிவ் எனப் பெயர் வைத்து, அப்பெயர்களில் அம்மரங்களை அழைத்துக்கொண்டு, அதனுடனே வாழ்ந்துகொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில், நிமோனியா தாக்குதலுக்குள்ளாகி ஸ்டேதமின் உடல்நலம் பாதிக்கப்பட்டதும், அவருடைய நண்பர்கள் அவரை உதகமண்டலத்திலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சிகிச்சை அளித்துள்ளனர்.

ஸ்டேதம் இறப்பதற்கு ஒரு மாதம் முன்பாக, “என்னை உலாந்தி செண்பக மரத்தடியில் புதைக்க வேண்டும். எனது சொத்துகள், அது கொஞ்சம்தான், அவை அந்த என்… தேக்கங் குழந்தைகளுக்கு…” என உயில் எழுதினார்.

அதன்படியே செய்யப்பட்டது. வில்லி ஸ்டேதம் அவரது விருப்பப்படியே தனது குழந்தைகளுடன் உலாந்தி மேட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அதனால், அந்தப் பள்ளத்தாக்கு இப்போது ஸ்டேதம் வாலி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது எனக் கதையை முடித்துள்ளார் புதுமைப்பித்தன்.

ஹ்யூகோ வுட் மறைந்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவரைப் பற்றி புதுமைப்பித்தன் எழுதிய இந்தக் கதையில், புனைவின் துணையோடு வரலாறு பதிவாகியிருப்பதை அறிய முடிகிறது.

புனரமைக்கப்பட்ட வீடு

பலமுறை யானையின் தாக்குதலுக்குள்ளாகி இடிந்து கிடந்த ஹ்யூகோ வுட் வசித்துவந்த வீட்டையும், அவரது நினைவிடத்தையும், 1996இல் உலாந்தி வனச்சரகராக இருந்த தங்கராஜா பன்னீர்செல்வம் அரசிடம் நிதி உதவி பெற்று அந்த வீட்டைச் சரிசெய்து சீரமைத்துள்ளனர்.

தற்போது, ஹ்யூகோ வுட் வசித்த வீட்டையும் அவரது கல்லறையையும் டாப் ஸ்லிப் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வந்து பார்ப்பதுடன், ஹ்யூகோ வுட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள வசதியாக அந்த வீட்டை நினைவு இல்லமாக்கும் முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார்.

பிரிட்டிஷ் நூலகத்திலிருந்து எனக்கு அனுப்பிய வுட்டின் பிறப்பு, இறப்பு குறித்த பதிவுகளின் நகலையும், புதுமைப்பித்தனின் தேக்கங்கன்றுகள் சிறுகதை கொண்ட நூல் தொகுதி ஒன்றையும் கடந்த 7.5.2017 அன்று என்னுடைய குடும்பத்தினருடன் டாப் ஸ்லிப் சென்று ஹ்யூகோ வுட் அவர்களின் நினைவிடத்தில் வைத்து அமராவதி வனச்சரகரான தங்கராஜா பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்தேன்.

ஹ்யூகோ வுட் பற்றிய இன்னும் பல செய்திகளையும், அவருடைய புகைப்படத்தையும் தங்கராஜா பன்னீர்செல்வம் தொடர்ந்து தேடிவருகிறார்.

இந்த நாட்டில் பிறக்கும் எதிர்கால மக்களுக்காகவே வாழ்ந்த ஹ்யூகோ வுட் வாழ்ந்த வீட்டையும், அவரைப் பற்றிய வரலாற்றையும் மக்கள் பார்வைக்குக் கொண்டுவருவதுதான் அவருக்குச் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.

(ஹ்யூகோ வுட்டைத் தேடிச் சென்ற பயணம் முடிந்தது.)

மீண்ட சொர்க்கம்

நாடு வீழ்ந்ததால் காடும் அழிந்தது!

ஆனைமலையின் மரங்கள் வீழ்ந்த கதை!

காடுகளைக் காக்க ஹ்யூகோ வுட் சொன்ன வழி!

லட்சக்கணக்கான தேக்கு மரங்கள் வந்தது எப்படி?

வரலாற்றைத் தொலைத்த வனத் துறை!

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon