மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 20 ஜன 2020

திமுக - அதிமுக கூட்டணி: தினகரன்

திமுக - அதிமுக கூட்டணி: தினகரன்

திமுகவுடன் தினகரன் நெருக்கமாக இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அமமுக பொதுச் செயலாளர் தினகரன் பதிலளித்துள்ளார்.

தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவரும் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் மீது கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டதாகக் கூறி நடவடிக்கை எடுக்க கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்திருந்தார். அதை ஏற்று மூவரிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளது திமுக. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்தால், ஸ்டாலின் ஏன் கொந்தளிக்கிறார்? இதிலிருந்து திமுகவுக்கும் தினகரனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது வெளிப்பட்டிருக்கிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பிரச்சாரத்துக்காக நேற்று (மே 1) மதுரை சென்ற அமமுக பொதுச் செயலாளர் தினகரன், அங்கு தங்க.தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் சகிதம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், முதல்வரின் குற்றச்சாட்டு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

“மூன்று பேரையும் தகுதி நீக்கம் செய்வது அநீதி என்று திமுக நினைத்திருந்தால் கொறடா புகார் அளித்தபோதே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் கடிதத்தைக் கொடுத்திருக்க வேண்டும். இப்போது கொடுத்திருப்பதால் எந்தவித நன்மையும் இல்லை. திமுக எங்களுக்கு உதவி செய்வதாக எடப்பாடி பழனிசாமி சொல்வதிலிருந்து, அவர்களுக்குள்தான் ஏதோ கூட்டணி இருப்பதுபோல தெரிகிறது. கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் 60:40 என பகிர்ந்துகொண்டார்கள். அரசு ஒப்பந்தங்களும் திமுக எம்.எல்.ஏ.க்களுக்குக் கிடைக்கிறது. இந்த நிலையில் தற்போது மூன்று பேரையும் தகுதி நீக்கம் செய்யத் தூண்டுவதுபோல திமுக செயல்படுகிறது” என்று குற்றம்சாட்டினார்.

தோல்வி பயத்தின் காரணமாகவே மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்ற தினகரன், “அவர்கள் மூவரும் ஏப்ரல் 18ஆம் தேதிவரை அமமுகவின் ஆதரவாளர்களாக இருந்தது உண்மை. அதன்பிறகு நாங்கள் கட்சி ஆரம்பிப்பதற்காகக் கொண்டுவந்த தீர்மானத்தில் அவர்கள் கையெழுத்திடவில்லை. அவர்கள் அதிமுக அம்மா அணியின் உறுப்பினர்கள்தான். சபாநாயகர் வேண்டுமென்றே தகுதி நீக்கம் செய்யலாம். அப்படி தேர்தல் வந்தால் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்” என்றும் தெரிவித்தார்.

அமமுக கரைவேட்டி அதிமுக போல உள்ளதாக குற்றம்சாட்டுகிறார்கள். அதிமுகவினர் வேண்டுமானால் அவர்கள் கரைவேட்டியின் நடுவில் வெள்ளைக்குப் பதில் காவியை மாற்றிக்கொள்ளட்டும் என்றார். மேலும், அதிமுக கொடியின் ஒரு பக்கத்தில் தாமரையைச் சேர்த்துக்கொள்ளட்டும் எனவும், ஏனெனில் இவர்கள் அதிமுகவை பாஜகவின் தமிழக கிளையாகவே மாற்றி வைத்துள்ளனர் என்றும் தினகரன் விமர்சித்தார்.

இதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட ஐராவதநல்லூர், விரகனூர், புளியங்குளம், கல்லம்பல் பகுதிகளில் அமமுக வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தினகரன், “தமிழகம் முழுவதும் 18 தொகுதிகளிலும் அமமுகதான் வெற்றி பெறும் என்று உளவுத் துறை மூலம் தெரிந்து பயந்துகொண்டு, எஞ்சியிருக்கும் நமது மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதன்மூலம் அவர் நோட்டீஸ் பழனிசாமி ஆகியுள்ளார். ஆனால், நான்கு தொகுதிகளிலும் நீங்கள் அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப் போகிறீர்கள்” என்று பேசினார்.

வியாழன், 2 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon