மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

தாமதத்திற்குப் பின் நாள் குறித்த ஜீவா படக்குழு!

தாமதத்திற்குப் பின் நாள் குறித்த ஜீவா படக்குழு!

ஜீவா நடிப்பில் உருவான கீ திரைப்படம் நீண்ட காலமாக திரைக்கு வராமல் தாமதமாகி வந்தது. சில முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டாலும் பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. இப்படத்தில் நிக்கி கல்ரானி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சைபர் குற்றங்களை மையமாக வைத்து தொழில்நுட்ப திரில்லர் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. புதுமுக இயக்குநரான காளீஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், இப்படம் மே 10ஆம் தேதியன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தின் தியேட்டர் உரிமைகளை சுக்ரா ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்பு, இப்படத்தின் தியேட்டர் உரிமைகள் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்தது. தற்போது தொழில் ரீதியாக சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இப்படம் திரைக்கு வர தயாராகியிருக்கிறது. சுமார் ஓராண்டுக்கு முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார்.

இதற்கு முன் மைக்கேல் ராயப்பன் தயாரித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் படுமோசமாக செயல்பட்டு தயாரிப்பாளருக்கு இழப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கீ படத்தை வெளியிடுவதிலும் மைக்கேல் ராயப்பன் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார். ஏற்கெனவே பலமுறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்ட கீ படம் மே 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தரப்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon