மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

சீனாவின் இஸ்லாமிய வெறுப்புத் தொழில்

சீனாவின் இஸ்லாமிய வெறுப்புத் தொழில்

பெருந்தேவி

இக்கட்டுரை தமிழ்ச் சூழலில் இருவகையில் இயங்கும் சொல்லாடல்களை முன்வைத்து எழுதப்படுகிறது. ஒன்று, பொதுவாக, உலகளாவிய முதலீட்டியத்தின் கொடுங்கரங்களை, கார்ப்பரேட் வலைப்பின்னல்களை “மேற்கு,” “அமெரிக்கா,” “ஜியோனிசம்” என்று வழக்கமான அரசியல் சரிநிலையைச் சார்ந்து, வசதியாக எடுத்துக்காட்டி, இஸ்லாம் குறித்த வெறுப்பைக் (Islamophobia) கவனப்படுத்தும் சொல்லாடல்கள். இரண்டாவது, இவற்றோடு இயைந்து, தற்போதைய சூழலில் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளைப் பற்றிப் பேசும்போது, இத்தகைய பயங்கரவாதத்தை அமெரிக்கா, இஸ்ரேல் அரசதிகார, மைய ஊடகப் போக்குகளோடு மட்டும் கோர்த்துப் பேசும் சொல்லாடல்கள். இவ்விரு வகையிலான சொல்லாடல்களும் இடதுசாரிகள் பலரும் தங்கள் நோக்கங்களுக்கு ஏற்ப கண் பட்டைகளைக் கட்டிக்கொண்டு உலகப் புவியரசியலைப் பார்ப்பதற்கான உதாரணங்கள்.

நான் கவனித்தவரை, இலங்கை குண்டுவெடிப்புகள் குறித்த பெரும்பாலான இணையப் பதிவுகளில், ஊடகக் கட்டுரைகளில் சீனாவின் பொருளாதார ஈடுபாட்டு அரங்கேற்றங்கள் சொல்லப்படவில்லை, அவை குறிப்பிடப்பட்டாலும் பூசிமெழுகி ஓரிரு வரி விமர்சனங்களாகவே இருந்தன. பொதுவாகவே ஊடக, இணையப் பொதுவெளிகளில் இஸ்லாம் குறித்த வெறுப்பு பரப்பப்படுவதைப் பற்றிய விவாதங்களில் சீனா போன்ற கம்யூனிச நாடுகளில் நடக்கும் கொடூரங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. சீனாவில் இயங்கும் “இஸ்லாம் வெறுப்புத் தொழில்” இன்னும்கூடப் பொதுவெளியில் ஆழமான விவாதத்துக்குள் வந்ததாகவோ, பலருக்கு அறிமுகமானதாகவோகூடத் தெரியவில்லை.

இஸ்லாத்துக்கு எதிரான முன்னெடுப்புகள்

அமெரிக்கா உள்ளிட்ட “மேற்கில்,” ஊடகங்களாலும் ஆட்சியாளர்களாலும் முன்மொழியப்பட்ட நல்ல முஸ்லிம் / கெட்ட முஸ்லிம் என்கிற இருமை வலுப்பட்டுவருகிறதுதான். இது “மேற்கில்” தொழிற்படும் பல்பண்பாட்டுத்துவக் கருத்தியலின் போதாமையை, பக்கச்சார்பை வெளிப்படுத்துவதாகவும் உள்ளதுதான். அவசியம் விமர்சிக்கப்பட வேண்டிய கருத்தியல் இருமை இது. ஆனால், அதே நேரத்தில் சீன அரசு முன்னெடுக்கும் இஸ்லாமிய விரோத, மனிதகுல விரோதக் குற்றச் செயல்கள் முஸ்லிம் என்ற மத அடையாளத்தையே ஒழிக்கப் பார்ப்பதாக உள்ளன. மட்டுமல்லாமல், முஸ்லிம் பெண்களுக்குப் பேரச்சமான சூழலை விளைவிப்பதில் முன்னுதாரணமாக அவை உள்ளன.

சீனாவில் நடைபெறும் இஸ்லாமிய வெறுப்புத் தொழிலை, முஸ்லிம் பெண்களை முன்வைத்து இக்கட்டுரை சுருக்கமாகப் பேசுகிறது. இதை எழுத உந்துதலாக அமைந்தது இலங்கை எழுத்தாளர் பாத்திமா மஜிதாவின் ஒரு பதிவு (26 ஏப்ரல் 2019). தற்போது இலங்கையில் “பொது இடங்களில் பாதுகாப்புச் சோதனையில் ஈடுபடும் பரிசோதகர்கள் முன்னிலையில் முஸ்லிம் பெண்கள் தங்களது ஸ்கார்ப், பர்தா, ஹபாயா போன்றவற்றினை கழற்றித் தங்களை அடையாளப்படுத்துமாறு வேண்டப்படுகின்றனர். இந்த வேளைகளில் முஸ்லிமல்லாத சிலர் முஸ்லிம் பெண்களின் ஆடைகளைப் பற்றிக் கேலியும் நையாண்டியுமாகப் பேசுகின்றனர். இந்தத் தருணத்தில் இப்பெண்களுக்கு ஏற்படும் வெட்கமும் அசௌகரியமும் சொல்லியடங்க முடியாது,” என அவர் எழுதுகிறார். இலங்கையில் தற்போது முஸ்லிம் சகோதரிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சங்கடமான நிலைமை இது.

அதே பதிவில், “இஸ்லாத்தில் கடமையாக்கப்படாத இந்தக் கருப்பு ஆடையை சவுதியிலிருந்து இறக்குமதி செய்து கிட்டத்தட்ட இருபது வருடங்களாக முஸ்லிம் பெண்களின் மூளைகளை சலவை செய்த” முஸ்லிம் ஆண்களையும் அவர் விமர்சிக்கிறார். இன்று நிலவும் சூழலைக் கருதி, அந்த ஆண்களே பெண்களிடம் ஆடைகளை மாற்றி அணியக் கோரும் அவலத்தையும் குறிப்பிடுகிறார்.

காணாமல்போகும் பெண் குரல்

பெண்கள் முகத்தை முழுக்க மூடும் ஆடை அணிய இலங்கை அரசு தடை செய்திருக்கிறது. மதச் சிறுபான்மையினரின் பண்பாட்டை ஒழுங்குபடுத்தும் வகையில், முஸ்லிம் பெண்களின் உடைத் தேர்வின் மீது அதிகாரம் செலுத்தும் அரசின் இடையீட்டுக்கும், இத்தகைய தேர்வை முஸ்லிம் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் அறிவுறுத்துவதற்கும் இடையில் பெண் குரல் என்பதற்கு இடமேயில்லாமல் போகிறது. சிந்தனையாளர் காயத்ரி ஸ்பிவக்கின் “Can the subaltern speak?” என்ற கட்டுரையின் வாதம் இங்கே பொருந்துவதாகத் தோன்றுகிறது.

முஸ்லிம் பெண்களின் உடை என்பது அவர்களது சுயதேர்வாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற பெண் குரல்தான் சரியான குரல். ஆனால், இக்குரல் பேரினவாத மற்றமைக்குக் கேட்கக்கூடிய வகையில் எழும்புமா, எழும்புகிற குரல் பெண்களின் உண்மையான குரலாக இருக்குமா, அல்லது பெண்ணின் உடைத்தேர்வை மொழியும் முஸ்லிம் ஆண் குரல்களின் மிமிக்ரி ஆக அது இருக்குமா போன்ற கேள்விகள் எழுகின்றன. முக்கியமாக, இந்தப் பெண் குரல் என்பது, சிங்களப் பேரினவாதம் வலுப்பட்டிருக்கும் சூழலில் எந்த அளவுக்கு, எந்த வரம்பெல்லைகளுக்குள் எழுப்பப்படக்கூடியது, கேட்கப்படக்கூடியது என்பவற்றையும் சிந்திக்க வேண்டும்.

உள்ளூரில் நிலவும் தட்பவெப்பம், சமூகப் பண்பாட்டுச் சூழல், மரபுகள் போன்றவற்றைக் கருத்திலெடுக்காமல், அரபு நாட்டிலிருந்து இறக்குமதி செய்த அந்நிய ஆடையாக புர்கா (அல்லது ஹபாயா) உள்ளது என்ற உண்மை ஒருபுறம், இந்த உண்மையை இனவாத, மதவாத அரசாங்கம் கையகப்படுத்தி, இஸ்லாமியர்களை ஒடுக்கப் பயன்படுத்தக்கூடிய சாத்தியம் இன்னொரு புறம். இஸ்லாமியச் சிறுபான்மையினரின் வாழ்க்கையில் இனவாத அரசின் அதிகாரம் மூக்கை நுழைக்கும்போது, இஸ்லாமியப் பெண்களின் குரல்வளை மேலதிகமாக நெரிக்கப்படும் என்றே தோன்றுகிறது, இவ்வாறு தோன்றுவதற்குச் சீனாவில் நடப்பவை எடுத்துக்காட்டாக இருக்கின்றன.

சீனாவின் ‘அழகு’ திட்டம்

பாத்திமா மஜிதாவின் பதிவை வாசித்தபோது உடனே நினைவுக்கு வந்தது சீனாவில் முஸ்லிம் பெண்களைக் குறிவைத்துச் செயற்படத் தொடங்கிய “Project Beauty” என்ற திட்டம். அரசு இயந்திரத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்கும் வகையில், சிறுபான்மையினரின் மதத்தை, பண்பாட்டை ஒழுங்குசெய்யும் செயற்பாடுகளில் இத்திட்டம் முதன்மையான ஒன்று. ஜின் ஜியாங் மாகாணத்தை இலக்காகக் கொண்ட இத்திட்டம் முஸ்லிம் பெண்களின் முகத்திரையை (veil) நீக்குவதைப் பிரதான இலக்காகக் கொண்டது. 2015இல் வெளிவந்த ஒரு செய்தியின்படி, முகத்தை மறைத்து புர்கா அணிந்த காரணத்தால், ஒரு முஸ்லிம் பெண் கஷ்கர் மக்கள் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் கணவர் தாடி வைத்திருந்ததாலும், சச்சரவு செய்கிறார் என்ற காரணத்தைச் சொல்லியும் ஆறாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

உடைக்காகவும் தாடிக்காகவும் தண்டிக்கப்படுபவர்கள் சீனாவில் அநேகம். கத்திரிக்கோலோடு அலையும் சீன அதிகாரிகள் பெண்களின் உடையை இழுத்துக் கத்தரிப்பதாகவும் ஒருசில நாளேடுகள் தெரிவித்திருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் பெரிய அளவில் வெளிவராததற்கு, விவாதிக்கப்படாததற்கு ஒரு காரணம் இன்று வரையிலும் ஆராய்ச்சியாளர்களும் பத்திரிகையாளர்களும் சீன அரசாங்கத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாலும்தான்.

ஜின் ஜியாங் மாகாணமே, கடந்த பத்தாண்டுகளில் உய்கர் (Uyghur) முஸ்லிம்கள் — பெரும்பாலும் இவர்களின் மூதாதையர்கள் துருக்கியிலிருந்து வந்தவர்கள் — எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்களுக்குப் ’பிரசித்தி பெற்ற’ இடம். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான தடுப்பு மையங்கள் (detention centers) எனும் அடைசலான கொட்டடிகள் இயங்குகின்ற இடம் அது. மருத்துவப் பரிசோதனைகள் என்ற வடிவத்தில் முப்பது மில்லியன்களுக்கும் மேலான மக்களிடம் பயோமெட்ரிக் தகவல்களைச் சேகரித்து, அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கக்கூடிய இடம். தீவிரவாதத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என ஒரு சின்ன சந்தேகம் அரசாங்கத்துக்கு வந்தால் போதும், தடுப்பு மையம்தான் கதி. இது எந்த அளவுக்கு என்றால், ஓர் இஸ்லாமியர் தொழுவதை Wechat போன்ற தளங்களில் முகப்புப் படமாக வைத்தாலோ, அல்லது வெளிநாட்டுக்குச் சென்று வந்தாலோ, தடுப்பு மையத்துக்குப் போகக்கூடிய ஆபத்து நேரலாம். இஸ்லாமியப் புனித நூல்களை சேமித்தாலோ, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தாலோ, அல்லது ஒருவர் உய்கர் முஸ்லிமாக இருந்து சமூக வலைத்தளத்தையே பயன்படுத்தாமல் இருந்தாலோகூட இதே அபாயம்தான்.

2017இல் மட்டும் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் இந்தத் தடுப்பு மையங்களில் சில காலமாவது தங்கியிருக்கிறார்கள் என்றால் எத்தகைய விபரீதச் சூழல் இது என்று புரிந்துகொள்ளலாம். இத்தகைய விபரீதச் சூழலில் முகத்திரை அல்லது புர்கா அணியும் பெண் பயங்கரவாத radical ஆக ‘ஜிஹாதியாக’ சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால், அரசாங்கத்தால் சந்தேகிக்கப்பட்டு பிடிக்கப்படுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

ஜின் ஜியாங் மாகாணத்தில் பெண் அணியும் முகத்திரையின் வரலாறு சிக்கல்களோடு கூடியது. இஸ்லாமிய வருகைக்கு முன்னர் — பத்தாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு என்று இதைக் குறிப்பிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் — முக்காடிடும் வழக்கம் பெண்கள் மத்தியில் இருந்தது. ஆனால், 1867இல் சின் ஆட்சியிடமிருந்து யாகூப் பெக் அதிகாரத்தைப் பறித்து இஸ்லாமிய காலிஃபேட்டை நிர்மாணித்த பின் பெண்கள் முக்காட்டோடு முகத்தை மூட வேண்டும் என வற்புறுத்தப்பட்டது. ஷரியா சட்டம் அமல்படுத்தப்பட்டதோடு அல்லாமல் ‘ஒழுக்கக் காவல் அதிகாரி’களும் நியமிக்கப்பட்டார்கள். முகத்திரை இல்லாமல் பொதுவெளியில் புழங்கும் பெண்களைச் சாட்டையால் அடித்தல் உள்ளிட்டவை நடந்தன என்றும் சில வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

அதே நேரத்தில், “கற்பு, அடக்கம், வெட்கம், நற்குணம்” போன்றவற்றின் குறியீடாக முகத்திரையைப் பெண்கள் கருதியதும் காலப்போக்கில் நிகழ்ந்தது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இஸ்லாமிய உடைப் பழக்கம் நகர்ப்புற உயர்வர்க்கத்தினரிடம் பின்பற்றப்பட்ட அளவுக்கு, கிராம மக்களிடம், அல்லது அடித்தள வர்க்கப் பெண்கள் மத்தியில் நிலவவில்லை என்றும் சொல்லப்படுகிறது. 1960களின் “கலாச்சாரப் புரட்சி”யின்போது பல்வேறு சமய, இனப் பழக்கவழக்கங்கள் தாக்குதலுக்கு உள்ளானபோது முஸ்லிம் பெண்களின் உடைப் பழக்கங்களின் மீதும் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதனால், முகத்திரை, முக்காடுப் பழக்கங்களைப் பெண்கள் கொஞ்சம் தளர்த்திக்கொண்டனர்.

ஆனால், 1990களின் மத்தியில், உய்கர் இஸ்லாமிய ஆண்களுக்கு இணையம் வாயிலாக, வியாபாரம், பயணம் போன்றவற்றின் வாயிலாக “பரந்த இஸ்லாமிய உலக”த்தோடான அறிமுகம் ஏற்பட்டது. அத்தகைய அறிமுகம் ஹன் சீனக் கலாச்சாரம் அவர்களை வேற்றாள்களாகப் பார்ப்பதற்கு, பாஸ்போர்ட், வேலை வாய்ப்பு போன்ற விஷயங்களில் சீன அரசாங்கம் அவர்களைப் பாகுபடுத்துவதற்கு எதிர்வினை ஆற்றக்கூடிய தளத்தைக் காட்டித்தந்தது. “சரியான முஸ்லிம்” என்ற வரையறையை முஸ்லிம்கள் பின்பற்றத் தொடங்கியது அப்போதுதான். திரைப்படங்கள் பார்ப்பது, இசை கேட்பது போன்றவை ஹராமாகக் கருதப்படத் தொடங்கின. வெள்ளிக்கிழமையில் தொழுகைக்குச் செல்பவர், ரமதான் நோன்பைத் தவறாமல் பாவிப்பவர் முதலிய வரையறைகள் தோன்றின. அத்தோடு முகத்திரையும் பெண்களைப் பொறுத்து அத்தியாவசியமான வரையறையாக மாறியது. முஸ்லிம் இளம்பெண்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறத் தொடங்கியது. பல்வேறு பாணிகள், துணி வகைகள், அணியும் விதங்கள் (உதாரணமாக, தலையை மட்டும் ஸ்கார்ஃபால் மூடுவது, மூக்குக்குக் கீழே முகத்தை மூடுவது, முகத்தோடு உடல் மொத்தத்தையும் மூடுவது, லேஸ் திரையால் முகத்தையும் உடலையும் மூடுவது) பரவத் தொடங்கின.

“சரியான முஸ்லிம் பெண்”ணுக்கான அத்தியாவசிய வரையறையாக இவை அமைந்தன என்றாலும் இது குறித்து ஒரே மாதிரியான கருத்துகளையும் பெண்கள் மத்தியில் நிலவவில்லை. சிலருக்கு இந்தப் புதிய உடைக் கலாச்சாரம் இஸ்லாத்தைச் சரியாகப் பின்பற்றுவதாக இருந்தது; சிலருக்கு புதிய ஃபேஷன் பிரகடனங்களாக இருந்தது; சிலருக்கு ஊரோடு ஒத்துவாழ்வதாக இருந்தது; வேறு சிலருக்கு உலகளாவிய இஸ்லாம் சமுதாயத்தில் அங்கத்தினராக இருக்கும் உவகையை இது தந்தது; வேறு சிலருக்கோ தேவையற்ற, பிற்போக்குத்தனமாகத் தோன்றியது. இந்த வேறுபட்ட அணுகுமுறைகள் அத்தனையும் ஒரேவிதமான அரசியல், கருத்தியல் சட்டகத்துக்குள் அடைக்கப்பட்டன என வாதிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் லிபோல்டும் திமதி க்ரோஸும்.

மத, இனச் சிறுபான்மையினரின் பழக்கவழக்கங்கள், வழிகள் முதலியவை பாதுகாக்கப்படும் என சீன மக்கள் குடியரசின் 1982ஆம் ஆண்டுச் சட்டம் கூறுகிறது. ஜின் ஜியாங் மாகாணத்தைப் பொறுத்தரை, சிறுபான்மையினரின் மத நம்பிக்கைகளை முன்னிட்டும் ஓரளவுக்குத் தன்னிச்சையான அதிகாரத்தை அதே சட்டம் தருகிறது. ஆனால், இதெல்லாம் ஏட்டில்தான். கடந்த வருடங்களில் மதத் தீவிரவாதப் பயங்கரவாதிகளின் செயல்களைச் சுட்டிக்காட்டி, பெண் உடை உள்ளிட்ட மத, பண்பாட்டு, இனப் பழக்கவழக்கங்கள் அனைத்துமே பரந்த அரசியல் மற்றும் கருத்தியல் சட்டகங்களுக்குள் பொருத்தப்படுவதே நடக்கிறது. இவ்வாறு பொருத்தப்பட்டு, அவற்றின் மறுவாசிப்பை மைய நீரோட்டச் சொல்லாடல்கள் நல்குகின்றன. ஹன் சீனப் பெரும்பான்மைக்கும், உய்கர் இஸ்லாமியச் சிறுபான்மைக்கும் இடையிலான போராட்டம், ‘நவீனத்துக்கும், முன்னேற்றத்துக்கும்,’ ‘பிற்போக்கு மனப்பான்மைக்கும் இறுகிப்போன மரபுக்குமா’ன போராட்டமாக, மறுவாசிப்பில் எடுத்துக்காட்டப்படுவதைச் சுட்டி எழுதுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இத்தகைய மறுவாசிப்பில், 2011ஆம் ஆண்டு முளைத்ததே “Project Beauty” திட்டம். இத்திட்டத்தின்படி ஜின் ஜியாங் பெண்கள் ஃபேஷன், அழகு சாதனப் பொருள்களின் பயன்பாடு முதலியவற்றை பெண்கள் மத்தியில் ஊக்குவிக்கும் முகமாக எட்டு மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தைச் சீன அரசாங்கம் கொட்டியிருக்கிறதெனக் கேள்விப்படுகிறோம். இது குறித்து 2012இல் வெளியான அரசின் தலையங்கம், “பெண்கள் அழகையும் அன்பையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருப்பதால், அவர்கள் அழகே உருவானவர்களாகவும் அன்பின் தூதுவர்களாகவும் இருக்க வேண்டும்” என்கிறது. “உடலை மூடிக்கொள்வது அழகற்றவர்களாக அவர்களை மாற்றுவதோடு, அவர்களின் உடல், உள நலத்துக்குக் கேடு தருவது” எனப் பேசுகிறது (Tianshen Net, May 9, 2012). ஜின் ஜியாங் பகுதியில் சில நகரங்கள், இத்திட்டத்தை முன்வைத்துப் பெண்களுக்கான பின்னல் போட்டிகள், அழகுப் போட்டிகள் போன்றவற்றை நடத்தியிருக்கின்றன.

பெண்கள் நலத்துக்காக என்று வாதிடப்பட்ட இத்திட்டத்தால் பெண்களுக்குக் கெடுபலன்களே ஏற்பட்டன. முகத் திரை அணிவதே தீவிரவாதத்தின் குறியீடு என்பது போன்ற பொருள்கொள்ளல் நடைபெறத் தொடங்கியது. முகத் திரை அணிந்த பெண்களைப் பொது வாகனங்களில் ஏற்ற மறுத்ததிலிருந்து, ‘இனி முகத்திரை அணிய மாட்டோம்’ என வற்புறுத்தி உறுதிமொழியைப் பெறுவதிலிருந்து, கொட்டடியில் அடைத்தல், மாற்றத்தைக் கற்றுக் கொடுக்கும் பெயரில் அவர்களின் ‘பராமரிப்பை’ அரசு வலிந்து மேற்கொள்ளுதல், முகத் திரை அணிந்த பெண்கள் பற்றிய விவரத்தை அரசுக்குத் தெரிவிக்க ஊக்கப்படுத்துதல், தகவல் தர 100 தொலைபேசி எண்ணை நிறுவுதல் போன்ற பலவும் நடந்தன. உய்கர் முஸ்லிம் சமுதாயம் அரசின் இத்தகைய பாகுபாட்டு நடவடிக்கைகளைக் குறித்து உய்கர்களின் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இன்றும் நடக்கின்றன.

இன்று இலங்கையில், முஸ்லிம் பெண்களின் புர்கா அல்லது முகத்திரை தடை செய்யப்பட்டிருக்கிறது. இத்தடை சீனாவின் நடவடிக்கைகளை நினைவூட்டுகிறது. ஜனாதிபதி சிறிசேனா, தடை செய்யும்போது, புர்காவை “பாதுகாப்பு அபாயம்” என்பதோடு மட்டுமின்றி “அடிப்படைவாதத்தின் சின்னம்” என்றும் கூறியிருப்பது நோக்கத்தக்கது. இதை வாசிக்கும்போது, சில வருடங்களுக்குமுன் சீன அரசின் இனக்கொள்கை ஆலோசகரான Zhu Weiqun பெண் உடை குறித்து வைத்த கருத்தை நினைவுகூர்வது அவசியம். ஜின் ஜியாங் மாகாணத்தில் தீவிரவாதம் பற்றிக் குறிப்பிடும்போது (ஏப்ரல் 2, 2014) அவர், முஸ்லிம் பெண்களின் “ஆழ்ந்த மதம்சார்ந்த சமய உடைக்குக்” காரணமாக ”இஸ்லாமியத் தீவிரவாதத்தைக்” கைகாட்டினார். ஒடுக்குமுறையின் வழியில், ஆட்சியாளர்களால் கைகாட்டப்படுதல் நடக்கும்.

முஸ்லிம் பெண்களின் இக்கட்டான நிலை

முஸ்லிம் பெண்கள் தங்கள் வாழ்வனுபவம் சார்ந்து, தாங்கள் அணிய வேண்டிய உடை பற்றி வகுப்பெடுக்கும் முஸ்லிம் ஆண்களின் சட்டாம்பிள்ளைத்தனம் குறித்து நியாயமாக வைக்கும் விமர்சனங்கள் வேறு; முஸ்லிம் பெண் உடை குறித்த சட்டங்களை, திட்டங்களை, பேரினவாதத்தையே எரிபொருளாகக் கொண்டு இயங்கும் அரசு இயந்திரங்கள், ஆட்சியாளர்கள் முன்னெடுப்பது வேறு. இரண்டுக்குமிடையிலான வித்தியாசத்தை அறிவது இன்றியமையாதது.

இலங்கையில் முஸ்லிம் பெண்களுக்கிடையில், பெண் குழுமங்களுக்கிடையில், இறக்குமதியான உடை குறித்து நடந்திருக்க வேண்டிய, நடக்காமல்போன விவாதம் சிங்களப் பௌத்தப் பேரினவாத அரசியலால் உட்செரிக்கப்படும் அபாயம் கண்முன்னே நிற்கிறது. சீனாவில் நடைபெற்றதைப் போல, “மரபுக்கும் பிற்பட்ட தன்மைக்கும்” எதிரான “நவீனமாக, முன்னேற்றமாக,” இலங்கையின் அரசியல் சட்டகத்தில், இனவாதக் கருத்தியல் சட்டகத்தில், பெண் உடை, செறிந்த குறியீடாகப் பங்கேற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் இலங்கைப் பெண்ணியவாதிகளின் பொறுப்பும் சுமையும் இருமடங்காகி இருக்கின்றன. ஒரே நேரத்தில் அவர்கள் தங்கள் எதிர்ப்பை அரசுக்கு எதிராகவும் இஸ்லாமிய ஆண் மைய அதிகாரத்துக்கு எதிராகவும் கூர்தீட்ட வேண்டியிருக்கிறது. அதற்கான வழியில் ஆற்றலும் துணிவும் அவர்களுக்கு உண்டு என்பதே இத்தருணத்தில் என் ஒரே நம்பிக்கை.

எழுத உதவிய கட்டுரைகள் / இணைய தள, பத்திரிகைச் சுட்டிகள்:

Leibold, James and Timothy Grose. ”Islamic Veiling in Xinjiang: The Political and Societal Struggle to Define Uyghur Female Adornment.” The China Journal, no. 76. 1324-9347/2016/7601-0005

Byler, Darren. Ghost World. https://logicmag.io/07-ghost-world/?fbclid=IwAR0M2UsTp_WpiCbtZ3xWNJniTkFSIqo9s55jNODOE-efIvjqzsK7ZNIlsYM

“Sri Lanka bans burqas for 'public protection' after bomb attacks.” https://www.cnn.com/2019/04/28/asia/sri-lanka-bans-burqa/index.html

“Beard, Burqa Land Couple in Jail.” USA Today. USA Today, MAR 31, 2015

“Chinese authorities accused of cutting Uighur dresses in latest crackdown on Muslim minority.” https://www.telegraph.co.uk/news/2018/07/17/chinese-authorities-accused-cutting-uighur-dresses-latest-crackdown/

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon