மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 1

அனைவருக்குமான அடிப்படை வருமானம் - 1

உலகின் ஒவ்வொரு நாடும், பிறந்த குழந்தை தொடங்கி முதியவர் வரை அனைவருக்கும் மாதாமாதம் அடிப்படை வருமானத் தொகை ஒன்றை அளிக்க முடிவு செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். ‘இதற்காக எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்? இதனை செயல்படுத்துவது சாத்தியமா? இதற்கான வளங்களை எவ்வாறு திரட்டுவது? மக்கள் தொடர்ந்து சந்தையில் பொருட்களை வாங்குவதை உறுதிசெய்யும் வண்ணம் விலைவாசி உயர்வுக்கேற்ப இந்த வருமானத்தை உயர்த்துவது சாத்தியமா? செழிப்பாக வாழ்பவர்களுக்கும் இத்தொகையைக் கொடுப்பது நியாயமாக இருக்குமா?’ என ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

அனைவருக்குமான அடிப்படை வருமானம் என்பதை ஆங்கிலத்தில் Universal Basic Income (UBI) என்பர். குடிமக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள, வேலையின்மையோ அல்லது வறுமையோ தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் ஒரு மக்கள்நல அரசு அனைவருக்கும் ஒரு குறைந்தபட்ச தொகையை ஒவ்வொரு மாதமும் அவர்களிடம் நேரடியாகக் கொடுப்பதே இதன் நோக்கம். இது ஏழை-பணக்காரர், வேலையுள்ளவர்-வேலையில்லாதவர் என எவ்வகை பாகுபாடும் இன்றி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் பல முன்னேறிய நாடுகள் மக்கள்-நலன் சார்ந்த அரசை உருவாக்கி, செல்வந்தர்களிடம் இருந்து அதிக வரி வசூலித்து, அனைவருக்குமான கல்வி, சுகாதாரம், வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை, ஓய்வூதியம் எனச் சமூகப் பாதுகாப்பின் அடித்தளத்தை விரிவுபடுத்தி, வலுப்படுத்தின.

ஆனால் இன்று வேலை, ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு இவற்றுக்கு இடையேயுள்ள தொடர்பு நலிவடைந்துகொண்டு வருகிறது. அதனால் வளர்ந்த நாடுகளும், வளர்ந்துவரும் நாடுகளும் அனைவருக்குமான அடிப்படை வருமானத்தின் அடிப்படையில் தங்கள் சமூகப் பாதுகாப்புக் கட்டுமானத்தை வடிவமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றன.

அனைவருக்கும் அடிப்படை வருமானம் மற்றும் குறைந்தபட்ச வருமான உறுதித் திட்டம் போன்ற கருத்தாக்கங்கள், பொருளியல் வட்டாரங்களைத் தாண்டி, அரசியல்வாதிகளாலும் பெரிதும் பேசப்படுகின்ற விவாதப்பொருளாக மாறியுள்ளது. வறுமையொழிப்பு, வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது எனும் பெருஞ்சவால்களுக்குத் தீர்வாக இவை பார்க்கப்படுகின்றன.

அனைவருக்குமான அடிப்படை வருமானம் என்பது புதிய கருத்தாக்கம் அல்ல. இதற்கு நெடிய வரலாறு உண்டு. ஆனால், திடீரென இக்கருத்தாக்கம் தவிர்க்கப்பட முடியாத பேசுபொருளாக உருவெடுத்திருப்பதற்கான காரணங்களை நாம் அறிந்துகொள்வது அவசியம். இதன் தத்துவார்த்த, அரசியல் மற்றும் பொருளியல் கோட்பாடுகளைக் கண்டறிந்து, அவற்றைப் புரிந்துகொள்ள முயல்வதே இத்தொடரின் நோக்கம். வாருங்கள், சேர்ந்தே பயணிப்போம்!

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon