மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

பூந்தமல்லி: இலங்கை நபர்களிடம் விடிய விடிய விசாரணை!

பூந்தமல்லி: இலங்கை நபர்களிடம் விடிய விடிய விசாரணை!

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 3 நபர்களிடம் பூந்தமல்லியில் விடிய விடிய விசாரணை நடந்துள்ளது.

இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி சென்னையில் சிலரை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலையடுத்து பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 3 பேரிடம் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று (ஏப்ரல் 30) இரவிலிருந்து விடிய விடிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மண்ணடியில் ஒருவரைப் பிடித்து விசாரித்ததில், சந்தேகத்துக்கு இடமான நபர்கள் பூந்தமல்லியில் இருப்பதாகத் தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அக்குடியிருப்பின் 11ஆவது மாடியில் உள்ள இலங்கையைச் சேர்ந்த 3 நபர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் 3 பேரிடம் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய ஹசனுடன் 3 பேருக்கும் தொடர்பு இருந்துள்ளது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில் மூவரிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் மூவருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த 3 பேரில் ஒருவரான துனுகா ரோஷன் எந்த விதமான ஆவணங்களும் இன்றி கடந்த ஓராண்டாக சென்னையில் வசித்து வருகிறார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் மீது இலங்கையில் கொலை வழக்குகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் துனுகா ரோஷன் தற்போது பூந்தமல்லி காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். எஞ்சிய இருவரிடமும் விசாரணை தொடர்ந்து வருகிறது.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon