மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

அனைவரையும் உள்ளடக்கிய சுகாதாரம், மருத்துவ வசதிகள் அவசியம்!

அனைவரையும் உள்ளடக்கிய சுகாதாரம், மருத்துவ வசதிகள் அவசியம்!

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா பல கோடி மக்களை வறுமையிலிருந்து விடுவித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், நாட்டு மக்கள் சுகாதாரமான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதையும், மருத்துவ வசதிகளைப் பெறுவதையும் அடுத்தடுத்து வந்த அரசுகள் உறுதிசெய்யத் தவறியுள்ளன.

சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்குவதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் அனைத்தும் சேர்ந்து செய்யும் செலவு, பல ஆண்டுகளாக தேசத்தின் மொத்த உற்பத்தியில் 1.5 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருந்து வந்துள்ளது. சுகாதார வசதிகளைப் பெறுவதற்கு அரசு செய்யும் செலவைவிட மக்கள் தங்களுடைய கையில் இருந்து செய்யும் செலவே அதிகம் என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை 2017-18.

2018-19க்கான வரவு-செலவு அறிக்கையில், உலகின் மிகப்பெரிய மருத்துவ வசதித் திட்டம் என்று “ஆயுஷ்மான் பாரத்” எனும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆரவாரத்தோடு அறிவிக்கப்பட்டது. 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் சுகாதாரக் காப்பீடு வழங்குவதே இதன் நோக்கம்.

பொருளாதார மேதை அமர்த்திய சென் சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் இத்திட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘ஆரம்பநிலை மருத்துவ வசதிகள் பெரும்பான்மை மக்களுக்கு இன்னும் கிடைக்காமல் இருப்பதை ஆயுஷ்மான் பாரத் திட்டம் எந்த வகையிலும் சரி செய்யாது. பெரும்பான்மை மக்களின் நலனுக்காக ஆரம்பநிலை மருத்துவ வசதிகளைக் கூட உறுதி செய்யாத நிலையில், நல்ல லாபம் சம்பாதிக்கும் தனியார் நிறுவனங்களின் நலனுக்காக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வழியே மானியம் வழங்குவது தவறான அணுகுமுறை’ என்பதே அவர் முன்வைக்கும் விமர்சனம்.

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. நோயற்ற, ஆரோக்கியமான குடிமக்கள் நாட்டின் செல்வங்கள். தங்களுடைய உற்பத்தித்திறன் வழியே நாட்டின் பொருளாதார வளங்களைப் பெருக்குவதற்கு மட்டுமில்லாமல், தாம் விரும்பும் வாழ்க்கையை வாழ்வதற்கும் நாட்டு மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய சுகாதார, மருத்துவ வசதிகள் வழங்குவது மிகமிக அவசியம்.

இந்தியா போன்றொரு நாட்டில் ‘ஏழைகளை சரியாக அடையாளம் கண்டு அவர்களுக்கு மட்டும் சுகாதார, மருத்துவ வசதிகள் வழங்குவோம்’ என்று சொல்வது, ‘நாட்டில் ஆபத்தில் இருப்பவர்களை மட்டும் சரியாக அடையாளம் கண்டு, அவர்களுக்காக மட்டும் காவல் துறையும், ராணுவமும் செயல்படும்’ என்பதற்கு சமம். அப்படிச் செய்தால் அதை நாம் ஒத்துக்கொள்வோமா? காவல்துறையும், இராணுவமும் நாட்டு மக்கள் அனைவருக்கும்தானே? எல்லோரும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தால் மட்டுமே பயமின்றி, சுதந்திரமாக இயங்க முடியும். எல்லோரும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நாடு முன்னேற முடியும்.

சிந்திப்போம்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon